ராஜஸ்தானில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் தவறான முடிவை காட்டியதால் பரிசோதனை செய்யும் பணிகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிசிஆர் எனப்படும் கிட் மூலம் பரிசோதனை முடிவுகள் வர நாள் கணக்கில் ஆகிறது. அதனால், அறிகுறி தெரியாத வீடுகளில் இருக்கும் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் இந்த நோய் சமூகப்பரவல் நிலையை அடையாமல் இருக்க ரேபிட் டெஸ்ட் கிட் எனப்படும் விரைவு சோதனை கருவி மூலம் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டது. 

இதில், பரிசோதனை முடிவுகள் 15 நிமிடத்திற்குள்ளாகவே முடிவுகள் கிடைக்கும். ஒரு நாளைக்கு நிறைய பேரின் ரத்த மாதிரிகளை சோதனை செய்யலாம் என்பதால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசு விநியோகித்தது. மேலும், மாநில அரசுகளும் போட்டிபோட்டுக்கொண்டு இறக்குமதி செய்தன. இந்நிலையில், ராஜஸ்தானில் இதுவரை 1,628 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. 25 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகையால்,  கொரோனா பாதிக்கப்பட்ட  மிக மோசமான மாநிலங்களில் ராஜஸ்தான் ஒன்றாகும். ஆகையால், நோய் தொற்றை விரைவாக கண்டுபிடிக்கும் முடியும் என்பதால் ராஜஸ்தான் அரசும்  10,000 ரேபிட் டெஸ்ட் சோதனைக் கருவிகளை கொள்முதல் செய்தது.

இந்நிலையில், ராஜஸ்தானில் ரேபிட் கருவிகள் தவறான முடிவை தந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாநில அரசு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து ராஜஸ்தானில் ரேபிட் கருவி மூலம் கொரோனா பரிசோதனை நடத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.