Asianet News TamilAsianet News Tamil

மிசோரம் தேர்தல்: பிரசாரத்தை தொடங்கும் ராகுல் காந்தி!

மிசோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை ராகுல் காந்தி இன்று தொடங்கவுள்ளார்

Rahul Gandhi to start his campaign in mizoram today smp
Author
First Published Oct 16, 2023, 1:37 PM IST

மொத்தம் 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 7ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் மாதம் 3ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்த நிலையில், மிசோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று தொடங்கவுள்ளார். மிசோரம் மாநிலத்துக்கு இன்று செல்லும் அவர் மூன்று நாட்கள் அம்மாநிலத்தில் முகாமிட்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவுள்ளார்.

ராகுல் காந்தி தனது பயணத்தின் போது, ஐஸ்வால் நகரில் நடைபெறும் பேரணிக்கு தலைமையேற்று மக்களுடன் உரையாடுவார் என்று மிசோரம் மாநில காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் லால்மல்சவ்மா நகாகா தெரிவித்துள்ளார். மேலும், அவரது பயணத்தின் போது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்கும் என்றும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

“"பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக ராகுல் காந்தி இன்று மிசோரம் வரவுள்ளார். தனது மூன்று நாள் பயணத்தின் போது, அவர் ஐஸ்வாலில் உள்ள சன்மாரியில் இருந்து கருவூல சதுக்கம் வரை 2 கிலோமீட்டர் தூர பேரணியில் பங்கேற்று, கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார். மாநிலத்தின் முக்கிய பிரமுகர்களுடன் அவர் கலந்துரையாடவுள்ளார்.” என லால்மல்சவ்மா நகாகா தெரிவித்துள்ளார். மிசோரமில் இருந்து கிளம்புவதற்கு முன்பு அக்டோபர் 18ஆம் தேதி செய்தியாளர்களை ராகுல் காந்தி சந்திப்பார்  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெண்ணையாறு தீர்ப்பாயம்: மீண்டும் மீண்டும் கால அவகாசம் கோரும் மத்திய அரசு!

மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன. அம்மாநிலத்தை பொறுத்தவரை மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் ஆகியவை பிரதான கட்சிகளாக உள்ளன. பாஜகவும் தனித்து உள்ளது. இருந்தாலும், 1987ஆம் ஆண்டு மிசோரம் மாநில அந்தஸ்து பெற்றது முதல் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் மிசோ தேசிய முன்னணி அல்லது காங்கிரஸ் ஆகிய கட்சிகளே மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன.

கடந்த 2018ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மிசோ தேசிய முன்னணி வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளது. சோரம்தங்கா மாநில முதல்வராக உள்ளார். மிசோ தேசிய முன்னணி மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. எதிர்வரவுள்ள தேர்தலில், மிசோ தேசிய முன்னணிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios