கைலாஷ் யாத்திரை சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, நேபாளில் உள்ள ஒரு ஓட்டலில் அசைவ உணவை சாப்பிட்டதாக புகைப்படம் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கடந்த 31-ம் தேதி டெல்லியில் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரை புறப்பட்டார். இதையொட்டி நேபாளம் தலைநகர் காத்மாண்டில் வோட்டோ என்ற ரெஸ்டாரன்ட்டில் ஜீன்ஸ், டீசர்ட்டுடன் அமர்ந்து உணவு சாப்பிடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 

இதில் ராகுல் சிக்கன் சூப் ருசித்து சாப்பிடுவது போன்ற புகைப்படம் வெளியானது. பாஜகவினர், உயிர்களை கொல்லக் கூடாது என பிரச்சார செய்து வருகின்றனர். இந்த வேளையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அசைவ உணவை சாப்பிடுவது போல் வெளியான புகைப்படங்களை, அனைத்து ஊடகங்களும் வெளியிட்டு வருகின்றன. இதனால், புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. 

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா கூறுகையில், தான் ஒரு இந்து, தீவிர சிவ பக்தன் போன்ற தோற்றத்தை ராகுல்காந்தி ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த நேரத்தில், புனித யாத்திரை என்ற பெயரில் ஊர் சுற்ற செல்லும் அவர், அசைவ உணவை சாப்பிடுவது சரியானது அல்ல என்றார்.

 

அதேபோல் பாஜகவினர் கூறும்போது, புனித யாத்திரை என்ற பெயரில் அசைவ உணவை சாப்பிடும் ராகுல், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதை மனதில் வைத்தே, கைலாஷ் யாத்திரை மேற்கொண்டுள்ளார். ராகுலின் ஏமாற்று வேலையை, மக்கள் நம்பமாட்டார்கள் என்றனர்.