Asianet News TamilAsianet News Tamil

ராகுலை கழுத்தைப் பிடித்து கீழே தள்ளிய போலீஸ்... அராஜக ஆட்சி - அட்டூழிய ஆட்சி.. எரிமலையாய் வெடித்த ஸ்டாலின்..!

உத்தரபிரதேசத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக உள்ளதையே காட்டுகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Rahul Gandhi attacked by UP police...mk stalin Condemned
Author
Uttar Pradesh, First Published Oct 1, 2020, 7:07 PM IST

உத்தரபிரதேசத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக உள்ளதையே காட்டுகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- எத்தகைய இரக்கமற்ற கொடூர மனம் படைத்தவர்கள் இந்த நாட்டில் வாழ்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடந்திருக்கும் நிகழ்வுகள்தான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்து நடந்திருக்கும் கூட்டுப்பாலியல் வன்முறைக் கொடுமைகள். 19 வயதான சிறுமியைக் கூட்டுப்பாலியல் வன்முறை நடத்திய நான்கு விஷ வித்துக்கள், அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்தும், முதுகெலும்பை உடைத்தும் நடத்திய வன்முறையைக் கேள்விப்படும் போதே சகிக்க முடியாததாக அமைந்துள்ளது. அப்பெண்ணின் கழுத்தை நெறிக்கும் போது அவரது நாக்கு துண்டாகி உள்ளது. உடலுறுப்புகள் செயல் இழந்த நிலையில் அவர் மருத்துவமனையில் மரணத்தைத் தழுவிவிட்டார். தன்னை இக்கதிக்கு ஆளாக்கிய கயவர்கள் யார் என்பதை அவர் வாக்குமூலமாகக் கொடுத்துவிட்டார்.

Rahul Gandhi attacked by UP police...mk stalin Condemned

இந்தக் கொடூர நிகழ்வின் அதிர்வலைகள் ஓயும் முன்னரே உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணைக் கடத்திச் சென்று இதேபோன்ற கொடுமையை அரங்கேறியுள்ளது. அந்தப் பெண்ணின் கால்கள், இடுப்பு எலும்புகள் முறிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதே உயிரிழந்ததாக அந்தப் பெண்ணின் தாயார் கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் சொல்கின்றன. பெண்களது இயல்பான வாழ்க்கைக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக உத்தரப் பிரதேசம் இருப்பதாக அம்மாநில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் உ.பி. மாநிலக் காவல்துறையின் நடவடிக்கைகள் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. பாலியல் வன்முறைக்கு உள்ளாகி இறந்த பெண்ணின் உடல் அவரது குடும்பத்தினருக்குக் கொடுக்கப்படவில்லை, அவசரம் அவசரமாக, காவல்துறையினரால் எரிக்கப்பட்டுள்ளது, அப்பெண்ணின் தந்தை திடீரென கடத்தப்பட்டார் என்று தகவல்கள் கூறுகின்றன.

Rahul Gandhi attacked by UP police...mk stalin Condemned

இதைத் தொடர்ந்து அப்பெண்ணின் வீட்டுக்கு ஆறுதல் சொல்லச் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் உ.பி. காவல்துறையினரால் தடுக்கப்பட்டுள்ளார்கள். அது மட்டுமல்ல, ஓர் அகில இந்தியத் தலைவரான ராகுல் காந்தியைக் கழுத்தைப் பிடித்து கீழே தள்ளியிருக்கிறது போலீஸ். அவர் மீது மிகமோசமான பலப்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. ஊடகங்களில் ஒளிபரப்பாகிய இக்காட்சிகளைப் பார்க்கும் போது உ.பி.யில் சட்டத்தின் ஆட்சி இல்லாமல் அராஜக ஆட்சி - அட்டூழிய ஆட்சி நடப்பதாகவே சொல்லத் தோன்றுகிறது.

Rahul Gandhi attacked by UP police...mk stalin Condemned

அகில இந்தியக் கட்சித் தலைவர் ஒருவரை, நாடாளுமன்ற உறுப்பினரை, செயல்பட விடாமல் தடுத்தது மட்டுமல்ல, அவரைப் பிடித்துத் தள்ளுவது, மரியாதைக் குறைவானது, மனிதநேயமற்றது, மிக மிகக் கண்டிக்கத்தக்கது. மனித உரிமைகளுக்கும், ஜனநாயக நெறிகளுக்கும் எதிரானது. இதற்கு உ.பி. பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். ராகுல் காந்தி அவர்களுக்கே இந்த நிலைமை என்றால், உ.பி.யில் சாதாரண சாமானியர்களின் நிலைமை என்ன? என்று ஸ்டாலின் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios