‘யாராவது உங்களோடு மோதினால் கண்ணைக் கசக்கிக்கொண்டு வந்து நிற்காமல் அவர்களைக் கொலைசெய்துவிட்டு வந்து என்னைப் பாருங்கள்’ என்று மாணவர்கள் மத்தியில் ஒரு கல்லூரியின் துணை வேந்தர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாகி வருகிறது. அவர் பேச்சின் வீடியோவும் வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

உத்தரபிரதேசம் ஜவுன்பூரில் உள்ளது வீர பகதூர்சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம். இதில் துணைவேந்தராக இருப்பவர் ராஜாராம். நேற்று மாணவர்கள் மத்தியில் ஒரு செமினாரில் கலந்துகொண்டு உரையாடிய அவர் மாணவர்களை கொலைவெறிக்குத் தூண்டும் வகையில் பேசினார்.

’இந்தப் பல்கலைக் கழக மாணவர்கள் என்ற பெருமையோடு நீங்கள் எப்போதும் திரியவேண்டும். பாறைகளை எட்டி மிதித்து நீர் வரவைக்கும் வயது உங்கள் வயது. யாருக்கும் எதற்கும் அஞ்சக் கூடாது. எதிரிகள் யாரோடாவது மோதும் நிலை ஏற்பட்டால் அவர்களை அடித்து உதையுங்கள். தேவைப்பட்டால் கொலை கூட செய்யுங்கள். ஆனால் அதற்கு முன்பாக கண்ணைக் கசக்கிக்கொண்டு என்னிடம் மட்டும் வந்து நிற்கக் கூடாது. மற்றவற்றை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.’ என்கிறார் ராஜாராம்.

ஆகா சிறப்பு மிஸ்டர் ரகுபதி ராகவ ராஜாராம்.