Asianet News TamilAsianet News Tamil

School open Puducherry:விரைவில் பள்ளிகள் திறப்பு.. முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.. ஆளுநர் தகவல்

தமிழகத்தைப் போன்றே புதுச்சேரி, காரைக்காலிலும் விரைவில் பள்ளிகளைத் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
 

Puducherry Schools will be open soon
Author
India, First Published Jan 28, 2022, 3:00 PM IST

புதுச்சேரி ரோட்டரி சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உடல் உறுப்புகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பயனாளிகளுக்கு செயற்கை உடல் உறுப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "கொரோனா தொற்றின் வீரியம் குறைந்து வருகிறது. முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து ஊரடங்கு இல்லாமலும், பெருமளவு பாதிப்பு இல்லாமலும், மக்கள் உணர்வு பாதிக்கப்படாமலும் எச்சரிக்கையுடன் புதுச்சேரியில் செயல்பட்டோம். இதை பலர் விமர்சித்தனர். கொரோனா நான்காவது அலை வரலாம். இனி கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.

கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசியேத் தீர்வு. தற்போது குழந்தைகளுக்காக ஹைதராபாத் பயோடெக் நிறுவனம் கொரோனாவிலிருந்து மீள சொட்டு மருந்து தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன. தமிழக பாடத்திட்டம் புதுச்சேரி, காரைக்காலில் பின்பற்றப்படுகிறது. இதனால் முதலமைச்சர்,கல்வியமைச்சருடன் கலந்து ஆலோசித்து பள்ளி, கல்லூரிகள் திறப்பு தேதி பற்றி முடிவு எடுக்கப்படும். 15 வயது முதல் சிறார்களுக்கான தடுப்பூசி பெரும்பாலானவர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. விரைவில் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு எடுக்கப்படும்" என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 9 ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக புதுச்சேரி, காரைக்கால் உட்பட அனைத்து பிராந்தியங்களிலும் மறு அறிவிப்பு வரும் வரை 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. பள்ளிகள் மூடப்பட்டாலும் ஆன்லைன் வகுப்பு தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10,11,12 ஆகிய வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அதில் மாற்றம் ஏதுமில்லை என்றும் கல்வித்துறை தெரிவித்தது.

மேலும் தமிழகத்தில் பிப்ரவரி 10 தேதி வரை கொரோனா ஊரடங்கை நீட்டித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 1 முதல் 12 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதே போல், அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைகழகங்கள், கல்லூரிகள்,தொழில் பயிற்சி மையங்கள் உள்ளிடவை திறக்க அனுமதியளிக்கப்பட்டது. இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ரத்துசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு கிடையாது. மேலும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கும் கிடையாது என்று அறிவிப்பு வெளியானது.

Follow Us:
Download App:
  • android
  • ios