நாளை விண்ணில் பாய்கிறது PSLV-C55 ராக்கெட்.. திருப்பதியில் தரிசனம் செய்த இஸ்ரோ விஞ்ஞானிகள்...
பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் மூலம் நாளை TeLEOS செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது.
சிங்கப்பூரின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான TeLEOS-02 செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி சி-55 (PSLV-C55) ராக்கெட் மூலம் நாளை ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.. இந்த பி.எஸ்.எல்.வி சி-55 செயற்கைக்கோள் இரண்டு சிங்கப்பூர் செயற்கைக்கோள்களுடன் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இஸ்ரோவின் வணிகப் பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் உடன் ஒப்பந்தத்தின் கீழ் இந்த பணி மேற்கொள்ளப்பட உள்ளது..
750 கிலோ எடை கொண்ட இந்த TeLEOS-2 விண்கலம் ஹாட்ஸ்பாட் கண்காணிப்பு மற்றும் மூடுபனி மேலாண்மை, விமான விபத்து தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பலவற்றிற்குப் பயன்படுத்தக்கூடிய படங்களை வழங்கும். மேலும் இந்த செயற்கைக்கோள் ரேடார் மூலம் 1 மீட்டர் தெளிவுதிறனில் தரவுகளை வழங்கும் திறன் கொண்டது.. கடந்த பிப்ரவரி மாதம் இந்த செயற்கைக்கோள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது..
பிஎஸ்எல்வி புதிய ஒருங்கிணைப்பு வசதியில் ஒருங்கிணைக்கப்பட்ட முதல் ராக்கெட் என்ற பெருமையை பிஎஸ்எல்வி-சி55 பெற்றுள்ளது. அதாவது முந்தைய ராக்கெட் ஏவுதல் போல் இல்லாமல், ராக்கெட்டின் பல்வேறு நிலைகளை ஒருங்கிணைத்து புதிய முறையில் இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதன் மூலம் குறைந்த நேரத்தில் அதிக பயணங்களை தொடங்க முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்..
பிஎஸ்எல்வி-சி55 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிற்பகல் 2:19 மணிக்கு விண்ணில் ஏவப்படும். இரண்டு செயற்கைக்கோள்களும் கிழக்கு நோக்கி குறைந்த சாய்வு சுற்றுப்பாதையில் ஏவப்பட உள்ளன. ராக்கெட் ஏவப்படும் நிகழ்வை பொதுமக்கள் நேரில் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. மேலும் https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ளலாம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதனிடையே பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் மாதிரியுடன் நேற்றிரவு இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதிக்கு சென்று, நாளை விண்ணில் ஏவும் பணி வெற்றிகரமாக நிறைவேற வேண்டும் என்று வழிபட்டனர்.
இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் திட்டம், இந்த ஆண்டின் 3-வது ராக்கெட் திட்டமாகும். கடந்த பிப்ரவரி மாதம் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் 3 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தியது. இதை தொடர்ந்து மார்ச் மாதம், எல்.வி.எம். 3 மூலம் வணிக செயல்பாட்டிற்கான 36 ஒன்வெப் செயற்கைக்கோளை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : ஒரே ஆண்டில் முறைகேடாக ரூ.30,000 கோடி.. முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்பாரா.? அண்ணாமலை கேள்வி