தர்மபுரி மாவட்டத்தை, வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து, இழப்பீடு வழங்கக் கோரி, வரும், 14-ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மா.கம்யூ., கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் தர்மபுரியில் நடந்தது. மாவட்ட செயலாளர் குமார் தலைமை வகித்தார்.

தர்மபுரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், தர்மபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்து கணக்கெடுத்து, முழுமையான இழப்பீடு வழங்குவதுடன், விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

கால்நடைகளுக்கு இலவச தீவனம் வழங்க வேண்டும் என, மாநில செயற்குழு உறுப்பினர்கள் குணசேகரன், ஆனந்தன் ஆகியோர் பேசினர்.

தொடர்ந்து, இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 14-ஆம் தேதி தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் மற்றும் பென்னாகரம் நல்லம்பள்ளி பாலக்கோடு, காரிமங்கலம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டியில் தாலுகா அலுவலங்கள் முன் தொடர் முழக்க போராட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.