கூட்டுறவு வங்கிகளில் ரூ. 1000, ரூ.500 நோட்டுக்களை டெபாசிட் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கேரள மாநிலத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளை மூடி, அதன் ஊழியர்கள் நேற்று ‘ஹர்த்தால்’ போராட்டம் நடத்தினர்.

கூட்டுறவு வங்கிகளில் பணபுரியும் ஊழியர்களில் பெரும்பாலும் பெண்கள் ஆவர். இவர்கள், நேற்று திருவனந்தபுரம் உள்ளிட்ட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஊர்வலமாக வந்து, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

திருவனந்தபுரத்தில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான வி.எஸ். அச்சுதானந்தன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “ மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, சாமானிய மக்களை கடுமையாகப் பாதித்துள்ளது'' என்றார். மேலும், செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் கை விரலில் மை வைக்கும் முறை குறித்தும், பிரதமர் மோடி, மத்திய அரசின் நடவடிக்கை குறித்தும் கடுமையாக விமர்ச்சித்து அச்சுதானந்தன் பேசினார்.

ரூ.1000, ரூ.500 நோட்டுக்களை டெபாசிட் செய்ய அனுமதித்தால், கருப்பு பணம் அதிக அளவில் கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுவிடும் என சிலர் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு கூட்டுறவு வங்கிகள் தான் முக்கிபங்காற்றி வருகிறது. ஆனால், டெபாசிட்டுக்கு தடை விதித்து, கூட்டுறவு துறையையே அழிக்க முயல்கிறது மத்திய அரசு என்று ஊழியர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், மாவட்ட கூட்டுறவு வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் ரூ.1000, ரூ.500 நோட்டுக்களையும், டொபாசிட்களையும் ஏற்க அனுமதிக்க வேண்டும். இந்த வங்கியில் உள்ள வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் விவசாயிகள் தான் என மத்திய அரசுக்கு கேரள மாநில அரசு நேற்று முன் தினம் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.