பிரதமர் நரேந்திர மோடி வரும் 15ம் தேதி காணொலி காட்சி மூலம் பீகாரில் நகர்ப்புற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக 7 முக்கியமான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்க உள்ளார். 

குடிநீர் விநியோகத் திட்டங்கள்(4), கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டங்கள்(2) மற்றும் ஆற்றுப்படுகை மேம்பாட்டு திட்டம்(1) என மொத்தம் ரூ.541 கோடி  மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கிவைக்கிறார். இந்த திட்டங்களை, பீகார் நகர்ப்புற மேம்பாட்டு மற்றும் வீட்டு வசதித்துறையின் கீழ் செயல்படும் BUIDCO(பீகார் நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம்) செயல்படுத்தவுள்ளது. இந்த திட்டங்கள் தொடக்க நிகழ்ச்சியில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாரும் கலந்துகொள்கிறார்.

நமாமி கங்கா திட்டத்தின் கீழ் பாட்னா மாநகரின் பியுர் மற்றும் கர்மாலிசாக் ஆகிய 2 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படவுள்ளது. 

அம்ருத் மிசன் திட்டத்தின் கீழ் சிவான் மற்றும் சாப்ரா ஆகிய நகரங்களில் குடிநீர் விநியோக திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் மூலம் அந்த பகுதி மக்களுக்கு 24 மணி நேரமும் எந்த தங்குதடையுமின்றி சுத்தமான குடிநீர் கிடைக்கும். இந்த திட்டங்களுக்கெல்லாம் 15ம் தேதி(நாளை - செவ்வாய்க்கிழமை) பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைக்கிறார்.

அம்ருத் மிசனின் கீழ் மங்கர் மாவட்டத்தில் மற்றொரு குடிநீர் விநியோக திட்டத்திற்கான அடிக்கலையும் பிரதமர் மோடி நாட்டுகிறார். இந்த திட்டத்தின் மூலம் மங்கர் மாவட்ட மக்களுக்கு பைப்லைன்கள் மூலம் சுத்தமான குடிநீர் விநியோகம் 24 மணி நேரமும் செய்யப்படும். அதேபோல ஜமால்பூரிலும் ஒரு குடிநீர் விநியோக திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இவையனைத்தையுமே பிரதமர் மோடி நாளை தொடங்கிவைக்கிறார்.

நமாமி கங்கா திட்டத்தின் கீழ், முசாஃபர்பூர் ரிவர்ஃப்ரண்ட் மேம்பாட்டு திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் முசாஃபர்பூரின் 3 மலைத்தொடர்களும்(பூர்வி அகாதா, சீதி, சந்த்வாரா) மேம்படுத்தப்படும். ஆற்றோர பகுதிகளில் அடிப்படை வசதிகளான இலவச கழிவறைகள், மாற்று அறை, வாட்ச் டவர் ஆகியவை அமைக்கப்படவுள்ளன. முறையான பாதுகாப்பு வசதிகள், தேவையான மின்விளக்கு வசதிகள் ஆகியவையும் ஏற்படுத்தித் தரப்படவுள்ளன. ஆற்றோர பகுதிகளை மேம்படுத்துவதன் மூலம் சுற்றுலாத்துறை வளர்ச்சி மேம்படும்.