பசு பாதுகாப்பு என்ற பெயரில் நாடு முழுவதும் பசு பாதுகாப்பு குண்டர்கள் நடத்தும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தவில்லை, அவர் மீது நடவடிக்கை எடுக்க பிரதமா் மோடி தவறி இரட்டை வேடம் போடுகிறார் என மாநிலங்கள் அவையில் காங்கிரஸ் கட்சி கடுமையான குற்றம் சாட்டு கூறியது.

நாடு முழுவதும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம் மக்கள் மற்றும் தலித்துகள் மீது பசு குண்டர்கள் தொடர் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் ராஜஸ்தானுக்கு மாடுகள் வாங்கச் சென்று திரும்பிக் கொண்டிருந்த தமிழக அதிகாரிகளுக்கும், பசு பாதுகாப்பு குண்டர்கள் அடி, உதை கொடுத்தனர்.

அவர்களை பிரதமர் மோடி 2முறை கண்டித்தும், பசு பாதுகாப்பு குண்டர்கள் தாக்குதல்களை நிறுத்தவில்லை.

இந்த நிலையில், பசு பாதுகாப்பு என்ற பெயரில் சிறுபான்மையினர், தலித்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து மாநிலங்களவையில் நேற்று முன்தினம் விவாதம் தொடங்கியது. 2-வது நாளாக நேற்றும் விவாதம் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் பேசியதாவது:-

பசு பாதுகாப்பு என்ற பெயரில் இந்த ஆண்டில்தான் அதிக கொலைகள் நடந்துள்ளன. கால்நடைகள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையால் தோல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பசு பாதுகாப்பு குண்டர்களால் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும், டுவிட்டரிலும் வலம் வருகின்றன. அவற்றை நான் பார்த்தபோது என் மனது மிகுந்த பதைபதைப்புக்கு உள்ளானது.

பசு பாதுகாப்பு குண்டர்கள் நடத்திய தாக்குதல்களைப் போன்று கடந்த 50 ஆண்டுகளில் நான் எந்தஒரு சம்பவத்தையும் பார்த்ததில்லை. எந்த உணர்ச்சி, சிந்தனையில் அடிப்படையில் இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன?. மோடிதான் கடந்த 2015 அக்டோபர் 8, 2016 ஆகஸ்ட் 6, 2017 ஜூன் 29 ஆகிய தேதிகளில் பேசிய பேச்சுகளில் பசு பாதுகாப்பு உணர்ச்சியை தூண்டி விட்டார்.

பசு பாதுகாப்பு குண்டர்கள் தொடர்பாக அவர் முரண்பட்டு பேசி வருகிறார். ஒரு முறை அவர், ‘இரவில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பகலில் பசு பாதுகாவலர்களாக மாறி விடுகின்றனர்’ என்று பேசினார். ஆனால், அவர்கள் மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையையும் மோடி எடுக்கவில்லை. இப்போது ஏற்பட்டுள்ள அச்சமான சூழலுக்கு பிரதமர் மோடிதான் காரணம். இரட்டை வேடம் போடுவதை நிறுத்திக் கொண்டு அவர், பசு பாதுகாப்பு குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகாத்மா காந்தியின் பொன்மொழிகளை பேசினால் மட்டும் போதாது; அவர் சொன்னவற்றையும் மோடி பின்பற்ற வேண்டும்.

இந்துத்துவ கொள்கைகள் பயங்கரவாத சூழலை உருவாக்கி விட்டன. இன்றைக்கு உண்மையான இந்துக்களுக்கும், போலி இந்துக்களுக்கும் இடையேதான் சண்டை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் பசு பாதுகாப்பு குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை இந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு கபில் சிபல் பேசினார்.

இதன்பின்னர் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, ‘பிரதமர் சொன்னதை ஆதாரப்பூர்வமாக கபில் சிபல் சொல்ல வேண்டும். ஆதாரமற்ற பேச்சுகள் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது’ என்றார்.

ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் விவாதத்தில் பங்கேற்று பேசியதாவது: பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் படுகொலைகள் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் செய்வதை விட கொடூரமாக உள்ளன. அரசியலும், மதமும் ஒன்றுக்கொன்று மோதும்போது உள்நாட்டில் கலகங்கள் உருவாகின்றன. பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடத்தப்படும் தாக்குதல்களால் பஸ், ரெயில்களில் பயணம் செய்ய மக்கள் அச்சப்படுகின்றனர்.

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் அதிக தாக்குதல்கள் நடந்துள்ளன. சிறுபான்மை முஸ்லிம்கள் இந்த நாட்டை வாழ்வதற்காகத்தான் தேர்வு செய்தனர்; சாவதற்காக அல்ல. எனவே இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சரத் யாதவ் பேசினார்.