ஆசிய கண்டத்திலடங்கும் பெரும் தேசத்தின் தனிச் சிறப்பு மிக்க பிரதமர்! என்கிற பெயரை சம்பாதித்து வைத்திருந்தார் மோடி. சுதந்திரத்துக்கு பிறகான இந்தியாவில் இதுவரையில் இல்லாத அளவுக்கு நமோவைத்தான் அதிகப்படியான இந்தியர்கள் தெரிந்து வைத்துள்ளனர். சர்வதேச அளவில் ஜனரஞ்சக முத்திரை பதித்த இந்திய பிரதமரும் மோடிதான். 

நவாஸ் ஷெரீஃப் அம்மாவுக்கு புடவை பரிசளித்து அன்பு மகனாக தன்னை அடையாளமிட்டார், ஒபாமா பின் டிரம்ப் இருவர் தோளிலும் கைபோட்டு தன்னை அப்டேட்டில் வைத்திருந்தார், ஜப்பான் பிரதமரை தம்பதி சகிதமாக இந்தியாவில் வரவழைத்து வளைய சுற்றிக் காட்டினார், நியூயார்க்! நியூஜெர்ஸி! சிட்னி என்று இந்த பூளோகத்தின் மிக முக்கிய நகரங்களில் பிரம்மாண்ட அரங்குகளில் இந்திய ஆங்கிலத்தில் இனிப்பு உரையாற்றினார், ’மோடி கோட்’ எனும் பிராண்டை உகாண்டா பொடியன் வரை பிரபலப்படுத்தினார், முரசடித்தார், கொம்பு சுற்றினார், சர்ஜிகல் ஸ்டிரைக்கில்  பயங்கரவாதத்துக்கே பக்கவாதம்  தந்தார்.  

இம்புட்டும், இதற்கு மேலும் புரிந்திருந்தும் கூட உள்நாட்டில் எந்த மேஜிக்கையும் நிகழ்த்தாது போய்விட்டார் மோடி. பிரதமர் வேட்பாளராக அவர் வலம் வந்தபோது, மூடி வைத்திருந்த அவரது கரங்களுக்குள் இந்த தேசத்தின் தலையெழுத்தை மாற்றும் மந்திரம் இருக்கிறது என்று கண்மூடித்தனமாக நம்பினான் ஒவ்வொரு இந்தியனும். ஆனால் பிரதமரான சந்தோஷத்தில் அவர் கைகளை விரித்துக் காட்டியபோது அதில்  ஒன்றுமில்லை, சாமான்ய இந்தியனிடம் இப்போது ஒன்றுமேயில்லை. அவரை கார்ப்பரேட் மனிதர்களுக்கான நண்பனாக அடையாளப்படுத்துகிறது எதிர்கட்சிகள். அதிலும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், மோடி தனது சரிவை கணித்து, அதை எதிர்கொள்ள தயாராகிவிட்டார்! என்று சில விஷயங்களை மேற்கோள்காட்டி குறிப்பிடுகிறது. 

அவற்றில் ஹைலைட்ஸாக சில...

* மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் இல்லம் புணரமைக்கப்படுகிறது திடீரென்று. தன் தோல்வியை உணர்ந்துவிட்ட மோடி, பதவியிறங்கிய பின் டெல்லியில் இந்த இல்லத்தில் இருந்துதான் அரசியலை கவனிக்க திட்டமிட்டுள்ளார். 

* மோடி படம் போடப்பட்ட காலண்டர்களை மத்திய அரசு அலுவலகங்களுக்கு தரக்கூடாது என்று டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் எழுந்த சர்ச்சைக்கு பெரும் எதிர்ப்பு காட்டாமல், அடிபணிந்துவிட்டது பி.ஜே.பி. தரப்பு. 

* மோடியை அவ்வளவாக ஆகாத அருண்ஜெட்லி, சுஷ்மா போன்றோர் மெதுவாக கழன்று செல்ல துவங்கிவிட்டனர். 

* அமித்ஷாவை இந்தியர்களுக்கு பெரிதாய் பிடிக்கவில்லை என்பதால், பெரும்பாலும் திரைமறைவு அரசியலை அவர் துவக்கி கணிசமான நாட்கள் நகர்ந்துவிட்டன. ... என்று நீள்கிறது. இதற்கெல்லாம் வெளிப்படை ரியாக்‌ஷன் காட்டுமளவுக்கு பிரதமருக்கு நேரமில்லை! என்பதும் உண்மையே.