சுயசார்பு திட்டத்தின் மூலம் உலகத்திற்கே இந்தியா வழிகாட்டுதலை ஏற்படுத்தி கொடுத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இந்தியா - அமெரிக்கா வர்த்தக கவுன்சில் உருவாக்கப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, இந்தியா ஐடியாஸ் என்ற உச்சி மாநாடு நடைபெறுகிறது. எதிர்காலத்தை கட்டமைத்தல் என்பதுதான் இந்த உச்சிமாநாட்டின் மையப்பொருள். 

இந்நிலையில், காணொலி மூலம் அந்த உச்சிமாநாட்டில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வாய்ப்புகளுக்கான நாடாக இந்தியா உருவாகிவருகிறது. இந்தியாவின் சுயசார்பு இந்தியா பொருளாதார திட்டம் உலகிற்கே வழிகாட்டும் விதமாக அமைந்துள்ளது.

இந்தியா டிஜிட்டல்மயமானதால் ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. இந்தியாவில் நகர்ப்புறங்களைவிட கிராமங்களில் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளது. சிறப்பான எதிர்காலத்திற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்தியா புதிய மருந்துகள் கண்டுபிடிப்பிலும் மருத்துவ துறையிலும் அதிவேக வளர்ச்சியடைந்துவருகிறது.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் விவசாயத்துறையில் வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அந்நிய நேரடி முதலீட்டில் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சாதனை படைத்துவருகிறது. 2019-2020ம் நிதியாண்டில், அமெரிக்க டாலரில் 74 பில்லியன் மதிப்பில் இந்தியாவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் விமான போக்குவரத்து, காப்பீடு ஆகிய துறைகளில் முதலீடு செய்ய அமெரிக்கா நிறுவனங்கள் முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, பேரிடர் காலங்களில் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு வலுப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.