பிரபல அரசியல் வியூக வகுப்பாளரும், ஜன்சுராஜ் கட்சியின் தலைவருமான பிரஷாந்த் கிஷோர் பொதுக்கூட்டத்தின் போது தொண்டர்கள் மத்தியில் சிக்கி காயமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல அரசியல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோர் பிகார் மாநிலத்தில் ஜன் சுராஜ் என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். பீகார் மாநிலத்தில் வருகின்ற நவம்பர் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் மாநிலம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக 2014ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற தேர்தலிலும், 2021ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற தேர்தலிலும் பிரஷாந்த் கிஷோர் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு ஆதரவாக பணியாற்றினார்.
மேலும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கும் ஆலோசகராக செயல்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக தற்போது பிரஷாந்த் கிஷோர் தமிழகத்தில் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆலோசனைகளை வழங்கி வந்தார். இதனிடையே பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் தனது சொந்த கட்சியை வெற்றி பெற வைக்கவேண்டும் என்ற முனைப்பில் பிரஷாந்த் கிஷோர் இருப்பதால் தவெக.வுக்கான ஆலோசகர் பொறுப்பில் இருந்து அவர் தன்னை விடுவித்துக் கொண்டுள்ளார்.
இதனிடையே பீகார் மாநில தேர்தல் காரணமாக பத்லாவ் யாத்திரை என்ற பேரணி மூலம் பிரஷாந்த் கிஷோர் மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில், நேற்றைய தினம் வாகனத்தில் சென்ற அவர் வாகனத்தில் இருந்து பிரசார மேடைக்கு நடந்து செல்ல முற்பட்டார். அப்போது அவரை சந்திப்பதற்காக முண்டியடித்த தொண்டர்களால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும் அவர் மீது தொண்டர்கள் விழுந்ததால் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரஷாந்த் கிஷோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு முதுகு எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
