பீகார் மாநிலத்துக்கு உலக வங்கி கடனாக கொடுத்த ரூ.40,000 கோடியை தேர்தலில் வெற்றி பெற பீகார் அரசும், என்டிஏ கூட்டணியும் தவறாக பயன்படுத்தியதாக பிரசாந்த் கிஷோர் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பாஜக, ஜக்கிய ஜனதா தளம், எல்ஜேபி ஆகிய கட்சிகளின் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது. காங்கிரஸ், ஆர்ஜேடியின் மகாபந்தன் கூட்டணி வெறும் 41 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதுவும் காங்கிரஸ் வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
படுதோல்வியை சந்தித்த பிரசாந்த் கிஷோர்
மேலும் பீகாரில் மாற்றத்தை உருவாக்குவேன் என்று களமிறங்கிய தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைந்தார். அவரின் ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து மிக மோசமான தோல்வியை சந்தித்தது. பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட தீவிர சிறப்பு திருத்த வாக்காளர் பட்டியலில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
பாஜக தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக் கொண்டு தங்களுக்கு எதிரான வாக்காளர்களை நீக்கி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ரூ.40,000 கோடியை வாரி இறைத்த என்டிஏ
இந்த நிலையில், பீகார் தேர்தலில் வெற்றி பெற பாஜக கூட்டணி ரூ.40,000 கோடி செலவு செய்துள்ளதாக பிரசாந்த் கிஷோர் பகீர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், ''நிதிஷ்குமார் அரசு உலக வங்கியிடம் இருந்து கடனாக பெற்ற ரூ.40,000 கோடியை பீகார் தேர்தல் இலவசங்களுக்காகவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காகவும் பயன்படுத்தியுள்ளது.
உலக வங்கி நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது
தேர்தல் நடத்தை விதிகள் இருந்தபோதும் ஒவ்வொரு பெண்களின் வங்கிக் கணக்கிலும் 10,00 ரூபாய் அனுப்பியுள்ளனர். வாக்குப்பதிவுக்கு முதல் நாள் வரை பெண்களுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 1.25 கோடி பெண்களுக்கு தலா ரூ.10,000 ரூபாய் விநியோகம் செய்துள்ளனர்.
இதுவே கடைசி நேரத்தில் பெண்கள் மனம்மாற காரணமாக இருந்துள்ளது. பீகாரில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதரத்துக்கு வழங்கிய உலக வங்கி நிதியை பீகார் அரசும், பாஜக கூட்டணியும் தவறாக பயன்படுத்தியுள்ளன'' என்று குற்றம்சாட்டியுள்ளார்.
பணம் கொடுக்காமல் இருந்தால் என்டிஏ படுதோல்வி
தொடர்ந்து பேசிய பிரசாந்த் கிஷோர், ''இப்படி பணத்தை வாரி இறைக்காமல் இருந்திருந்தால் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலில் படுதோல்வியை சந்தித்து இருக்கும். ஜன் சுராஜ் கட்சி முதியோர்களுக்கு ஓய்வூதியம் ரூ.2,000 வழங்குவதாக உறுதியளித்த பின்னர், அவசரம் அவசரமாக நிதிஷ்குமார் அரசு முதியோர் ஓய்வூதியத்தை ரூ.700 லிருந்து ரூ.1,100 ஆக உயர்த்தியது'' என்று கூறினார்.
தனது கட்சி தோல்விக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்
ஜன் சுராஜ் கட்சியை ஆதரிப்பது ஆர்ஜேடி மீண்டும் ஆட்சிக்கு வர உதவும் என்று சில வாக்காளர்கள் அஞ்சியதே தனது கட்சி போட்டியிட்ட 243 இடங்களிலும் தோல்வியை தழுவ காரணம் என்றும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
