5 மாநிலத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, நடத்த விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால், பிப்ரவரி முதல் தேதி தாக்கலாகும் பொது-ரெயில்வே பட்ஜெட்டை மார்ச் 8-ந் தேதிக்கு பின் தாக்கல் செய்யக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையரிடம் 11 எதிர்க்கட்சிகள் சேர்ந்து மனு அளித்துள்ளன.

சலுகைகள், திட்டங்கள்

பிப்ரவரி 4-ந்தேதி பஞ்சாப், கோவா ஆகியமாநிலங்களில் தேர்தல் நடக்கிறது. ஆனால், பிப்ரவரி 1-ந்தேதி மத்திய அரசு 2017-18ம் ஆண்டுக்கானபட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. அந்த பட்ஜெட்டில் 5 மாநில வாக்காளர்களைக் கவரும் விதத்தில் சலுகைகளும், திட்டங்களும் அறிவிக்கப்பட்டால் அது பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்கு சாதகமாக அமையும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

11 கட்சிகள்

இதையடுத்து, டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் அலுவலகத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியைச் சந்தித்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, தி.மு.க., ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய 11 எதிர்க்கட்சிகள் தேர்தலை தள்ளி வைக்க கோரிக்கை விடுத்தன.

காங்கிரஸ் சார்பில், மூத்ததலைவர்கள் குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் டேரீக் ஓ பிரையன் எம்.பி., தி.மு.க.சார்பில் திருச்சி சிவா எம்.பி., பகுஜன்சமாஜ் கட்சியின் எம்.பி. அம்பேத் ராஜன், ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி. கே.சி. தியாகி ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையரைச் சந்தித்தனர்.

தேர்தலும்-பட்ஜெட்டும்

பிப்ரவரி 4-ந்தேதி பஞ்சாப், கோவா மாநிலத் தேர்தலும், மார்ச் 8-ந்தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவும் நடக்கிறது. இதற்கு பின் பொது பட்ஜெட் தாக்கல் செய்ய கோரியுள்ளன.

ஆனால், பாரதிய ஜனதா கட்சி அவ்வாறு பட்ஜெட்டை தள்ளிப்போட முடியாது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு அவசியமானது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் செய்தார்களே

இதுகுறித்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், “ கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும்போது காங்கிரஸ் கட்சி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த பின்பு தான் தேர்தலைச் சந்தித்தது. ஆதலால், இதில் தவறில்லை'' எனத் தெரிவித்தார்.

பாக்ஸ்மேட்டர்...

சமமாக நடத்துங்கள்

இந்நிலையில், தேர்தல் ஆணையரிடம் மனு அளித்தபின், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குலாம்நபி ஆசாத் நிருபர்களிடம் கூறுகையில், “ கடந்த 2012-ம் ஆண்டு இதேபோல 5 மாநிலத் தேர்தல் நடந்தபோது, எதிர்க்கட்சிகள் கோரிக்கையை ஏற்று, காங்கிரஸ் கட்சி பட்ஜெட்டை பிப்ரவரி 28-ந்தேதிக்கு பதிலாக மார்ச் 16-ந்தேதி தாக்கல் செய்தது. ஆதலால், தேர்தல் வாக்குப்பதிவு அனைத்தும் முடியும்வரை பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடாது என்று வலியுறுத்தினோம்.

தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சிகள் எந்தவிதமான ஆதாயங்களும் அடையக்கூடாது என்பதை தேர்தல் சட்டங்கள் தௌிவாகக் கூறி இருக்கின்றன. எதிர்க்கட்சிகளையும், ஆளும் கட்சியையும் சமமாக நடத்த வேண்டும். பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட்டை பாரதியஜனதா அரசு தாக்கல் செய்தால், அது வாக்களர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்  விதத்தில் சலுகைகள், திட்டங்களை அறிவிக்கும்'' என்றார்.

காங்கிரஸ் தலைவர் ஆனந்த்சர்மா கூறுகையில், “ தேர்தல் நேரத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வாக்காளர்களை ஈர்க்கும் விதத்தில் இதற்கு முன் எந்த அரசும் செயல்பட்டதில்லை'' எனத் தெரிவித்தார்.

பாக்ஸ் மேட்டர்....

ஆய்வு செய்வோம்

எதிர்க்கட்சிகளின் கோரிக்கை மனு குறித்து தேர்தல் ஆணையம், “ எதிர்க்கட்சிகள் அளித்துள்ள கோரிக்கை மனு குறித்து ஆளும் பாரதியஜனதா கட்சியின் கருத்து கேட்கப்படும். அதே சமயத்தில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கை தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு, பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து ஆய்வு செய்யப்படும்'' என தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.