மும்பை தஹிசார் பகுதியில் உள்ள மார்க்கெட்டில் விற்பனைக்காக கிரேட்களில் வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தக்காளியை மர்ம நபர்கள் திருடிச் சென்றதையடுத்து அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை தற்போது தாறுமாறாக எகிறியுள்ளது. சின்ன வெங்காயம் கடந்த 2 மாதங்களாகவே கடும் விலை உயர்வை சந்தித்துள்ளது. கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருவதால், பொது மக்கள் சின்ன வெங்காயத்தையே மறந்துவிட்டனர்.

இந்நிலையில் கடந்த 3 வாரங்களாக  தக்காளியின் விலையும் தாறுமாறாக எகிறியுள்ளது. கடந்த வாரம் உச்சபட்சமாக ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போதும் 100 ரூபாய் அளவுக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மும்பை தஹிசார் பகுதியில் உள்ள மார்க்கெட்டில் கடை வைத்திருப்பவர் சாந்திலால் ஸ்ரீவத்சவ் என்பவர், நேற்று முன்தினம் இரவு 700 கிலோ தக்காளி வாங்கி வந்துள்ளார். எலி சேதப்படுத்தும் என்ற பயத்தில் கடைக்கு வெளியில் தக்காளி கிரேடுகளை இறக்கி வைத்துவிட்டு வந்தார்.

மறுநாள் காலை கடைக்கு சென்று பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். அவர் முதல் நாள் வைத்திருந்த இடத்தில் தக்காளி இல்லை. யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், திட்டமிட்டு தக்காளியை மொத்தமாக திருடிச் சென்றுள்ளனர்.இதுகுறித்து சாந்திலால் கொடுத்த புகாரின் பேரில் தஹிசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தக்காளியை திருடிய கும்பலை வலைவீசி 
தேடி வருகின்றனர். மேலும் தக்காளி ஸ்டாக் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில்  துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நூற்றுக்கணக்கான கிலோ தக்காளி விற்பனையாகாமல்  அழுகிப் போய் குப்பையில் கொட்டும் நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது தக்காளி விஐபி ஆகிவிட்டதால் துப்பாக்கி ஏந்திய  போலீசார் பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.