இந்த அரசுத் திட்டங்களை தவற விடாதீங்க.. இந்திய மக்கள் அனைவரும் தெரிஞ்சுக்கணும்!
மாதம் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை சம்பாதிப்பவர்கள் கூட, அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் தங்கள் நிதிச் சுமையைக் குறைக்கலாம். இக்கட்டுரையில் அரசு திட்டங்கள் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை காணலாம்.

அரசு தரும் உதவிகள்
மாதம் ரூ.15,000 முதல் ரூ.25,000 சம்பளத்தில் வாழ்க்கையை ஓட்டுவது சுலபம் கிடையாது. வீட்டு வாடகை, மின் கட்டணம், குழந்தைகளின் படிப்பு செலவு, கடன் தவணை, திடீர் மருத்துவ செலவுகள் என்று ஒரு மாதம் முழுக்க செலவுகள் பட்டியலாக வரிசை கட்டி நிற்கும். இதனால் “என சம்பளத்தில் சேமிப்பது எப்படி?” என்று பலர் கவலைப்படுவார்கள். ஆனால் பலருக்கு தெரியாத ஒரு உண்மை என்னவென்றால், இந்த வருமான பிரிவினருக்காகவே அரசு சில திட்டங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்குகிறது. அரசு திட்டங்கள் ஏழைகளுக்கே என்ற எண்ணம் தவறு. சரியான தகவல் தெரிந்தால், குறைந்த வருமானத்திலும் வாழ்க்கையை சமாளிக்க அரசு ஆதரவு பெரிய உதவியாக இருக்கும்.
ஆயுஷ்மான் பாரத்: மருத்துவ செலவுகளுக்கு பெரிய ரிலீஃப்
குறைந்த வருமான குடும்பங்களுக்கு மிக முக்கியமான சவால் மருத்துவ செலவுகள் தான். ஒரு சிறிய ஆபரேஷன் அல்லது திடீர் சிகிச்சைக்கே பல ஆயிரம் ரூபாய் செலவாகும். இப்படிப்பட்ட நேரத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் பலருக்கு நிம்மதியாக இருக்கிறது. அரசு பட்டியலில் உங்கள் குடும்பம் இருந்தால், இந்த தகுதி திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெற வாய்ப்பு உள்ளது. குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்கள், தினக்கூலி பணியாளர்கள், தனியார் வேலைக்கு செல்லும் பலருக்கும் இது பாதுகாப்பான “மருத்துவ கவசம்” போல செயல்படுகிறது. மருத்துவ செலவு பயம் இல்லாமல் வாழ இந்த திட்டம் உதவக்கூடியதாக உள்ளது.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசம்
டெலிவரி பாய், கட்டுமானத் தொழிலாளி, கடை ஊழியர், ஓட்டுநர், ஹெல்பர், ஃப்ரீலான்சர் என்று அமைப்புசாரா துறையில் வேலை செய்பவர்கள் அதிகம். இவர்களுக்கு எப்போதும் “வேலை நிலைத்திருக்குமா?” என்ற கவலை இருக்கும். இவர்கள் பயன்படுத்த வேண்டிய முக்கிய திட்டம் தான் e-Shram Card. இந்த கார்டு இருப்பவர்கள் சில சூழ்நிலைகளில் விபத்து காப்பீடு போன்ற ஆதரவை பெற வாய்ப்பு உள்ளது. இதைவைத்து அரசு வழங்கும் பல சமூக பாதுகாப்பு உதவிகளுக்கும் நீங்கள் இணைக்கப்படலாம். உங்கள் துறையில் வேலை நிரந்தரம் இல்லாவிட்டாலும், அரசு தரும் பாதுகாப்பு அம்சங்கள் உங்கள் குடும்பத்திற்கு ஒரு நிம்மதியை தரும்.
எதிர்காலத்தில் பெரிய பலன்
தனியார் நிறுவனங்களில் ரூ.25,000க்கு குறைவாக சம்பளம் பெறுபவர்களுக்கு பல இடங்களில் EPF மற்றும் ESI போன்ற வசதிகள் வழங்கப்படும். சிலருக்கு “என்னடா சம்பளத்திலேயே பிடிச்சுடுறாங்க” என்று தோன்றலாம். ஆனால் உண்மை என்னவென்றால், EPF என்பது உங்கள் ஓய்வுக்கால சேமிப்பு மாதிரி. குறைந்த சம்பளத்தில் இருந்தாலும் நீண்ட காலத்தில் இது நல்ல தொகையாக மாறும். அதே போல ESI மூலம் சில மருத்துவ சேவைகள் குறைந்த செலவில் அல்லது இலவசமாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதனால் EPF/ESI இருந்தால் அதை “பிடித்தம்” என்று மட்டும் பார்க்காமல், “பாதுகாப்பு திட்டம்” என்று நினைத்துக்கொள்வது நல்லது.
வாழ்க்கை செலவுக்கு நேரடி ஆதாரம்
குழந்தைகள் பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கிறார்கள் என்றால், வருமானத்தைப் பொறுத்து பல மத்திய, அரசு கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு நீங்கள் தகுதி பெறலாம். இந்த உதவித் தொகை பல சமயங்களில் மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வருவதால், படிப்பு செலவின் சுமை குறையும். இன்னொரு பக்கம், உணவுக்கான செலவை குறைக்கும் வகையில் மலிவு விலை ரேஷன் திட்டங்களும் பல மாநிலங்களில் நடைமுறையில் உள்ளன. அரிசி, கோதுமை, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பது மாத செலவுகளுக்கு பெரிய மாற்றத்தை தரும். அதே நேரத்தில் இந்த வருமானத்தில் இருப்பவர்கள் பலர் வருமான வரி வரம்பிற்கு வராமல் இருக்கலாம். ஆனால் “வரி செலுத்தவில்லை” என்றால் அரசு உதவிகள் கிடையாது என்பது இல்லை. இந்த மக்கள் தான் நாட்டின் பொருளாதாரத்தை இயக்கும் முதுகெலும்பு என்பதால், அவர்களுக்காகவே பல திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பல திட்டங்களில் தகுதிகள் மாநிலத்துக்கு மாநிலம் மாறலாம். ஆதார், வங்கி கணக்கு, மொபைல் நம்பர் இணைப்பு சரியாக உள்ளதா என்றால் சரிபார்த்து விண்ணப்பிப்பது நல்லது.

