சண்டிகரில் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகளை காரில் துரத்திய விவகாரத்தில் போலீசில் கைதான மாநில பா.ஜனதா துணைத் தலைவரின் மகன் உள்ளிட்ட 2 பேர் குறித்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியானா மாநில பா.ஜனதா தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ்(வயது23). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் இரவு தனது நண்பரான ஆஷிஷ் குமார்(வயது27) என்பவருடன் சேர்ந்து பெண் ஒருவரை 5.கி.மீ. வரை பின்தொடர்ந்து விரட்டி, விரட்டி தொல்லை கொடுத்தனர்.  ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் மகளான அந்த பெண், இது குறித்து போலீசில் புகார் செய்தார்.

அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விகாஸ் பராலா மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர். அவர்கள் மீது ஜாமீனில் வௌிவரக்கூடிய மோட்டார் வாகனச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட போதும் உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி இந்த விவகாரத்தில் பின்வாங்கப்போவதில்லை, முறைப்படி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், காரில் அந்த பெண்ணை துரத்தியபோது இருந்த சி.சி.டி.விகேமராக்களை ஆய்வு செய்ய இருக்கிறோம் என்று சண்டிகர் போலீஸ் எஸ்.எஸ்.பி. ஈஸ் சிங்கால் தெரிவித்து இருந்தார். அவர் கூறுகையில், “ இளம் பெண்ணை காரில் துரத்திய போது, அந்த சாலையில் ஏராளமான கண்காணிப்பு கேமராக்கள்இருந்துள்ளது அதை ஆய்வு செய்ய இருக்கிறோம். அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு கேமராக்களையும் ஆய்வு செய்வோம்’’ எனத் தெரிவித்து இருந்தார்.

இதற்கிடையே அந்த பெண்ணை துரத்திய போது சாலைப் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த 11 கேமராக்களில் 6 கேமராக்கள் செயல்பாட்டில் இல்லை எனக் கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று 5 கேமராக்களை போலீசார் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ பாதிக்கப்பட்ட பெண்ணின் காரை, குற்றம்சாட்டப்பட்ட இருவரின் கார் துரத்திச் சென்ற சாலைப் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த 5 கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி, அதில் உள்ள காட்சிகளை எடுத்து ஆய்வு செய்து வருகிறோம்’’ எனத் தெரிவித்தார்.