கேஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு.. மகளிர் தினத்தில் குட்நியூஸ் சொன்ன பிரதமர் மோடி..
மகளிர் தினத்தை முன்னிட்டு எல்பிஜி சிலிண்டர் விலையை குறைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்
வீட்டு பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலையை குறைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார். சர்வதேச மகளிர் தினத்தன்று தனது அரசின் முடிவை அறிவித்த பிரதமர் மோடி, வீட்டு பயன்பாடு எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ.100 குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.. இந்த முடிவு லட்சக்கணக்கான குடும்பங்களின் நிதிச் சுமையை கணிசமாகக் குறைக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ இன்று, மகளிர் தினத்தையொட்டி, எல்பிஜி சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்க எங்கள் அரசு முடிவு செய்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான குடும்பங்களின் நிதிச் சுமையை கணிசமாகக் குறைக்கும், குறிப்பாக நமது பெண் சக்திக்கு பயனளிக்கும்.
சமையல் எரிவாயுவை மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம், குடும்பங்களின் நல்வாழ்வை ஆதரிப்பதோடு ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களுக்கு ‘எளிதாக வாழ்வதை’ உறுதிசெய்வது என்ற எங்கள் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப உள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு, ரக்ஷபந்தனை முன்னிட்டு 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.200 குறைத்தது. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கும் விலை குறைப்பு பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை, 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1,103. இருப்பினும், விலைக் குறைப்புக்குப் பிறகு, விலை ரூ. 903 ஆகக் குறைந்தது. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு, கடந்த ஆண்டு குறைக்கப்பட்ட விலை ரூ. 703 ஆகும்.
மத்திய அரசின் சமையல் எரிவாயு மானியம் நீட்டிப்பு! ஒரு சிலிண்டர் ரூ.603 க்குக் கிடைக்கும்!
இந்த நிலையில் நேற்று, யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களுக்கு எல்பிஜி சிலிண்டர் மானியம் ரூ.300 ஏப்ரல் 1 முதல் அடுத்த நிதியாண்டில் நீட்டிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. கடந்த ஆண்டு அக்டோபரில், 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர்களுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கான மானியத்தை ரூ. 200லிருந்து ரூ.300 ஆக அரசாங்கம் உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.