முதலில் நம் விஞ்ஞானிகளை கண்டு தலைவணங்க விரும்புகிறேன் - பெங்களூருவில் மக்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி!
கடந்த ஒரு வாரகாலமாக வெளிநாட்டு பயணத்தில் இருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று காலை சுமார் 6:15 மணி அளவில் கிரீஸ் நாட்டில் இருந்து, ISRO விஞ்ஞானிகளை காண நேரடியாக பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கினார்.
தென்னாபிரிக்க நாட்டில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்று, அதன் பிறகு கிரீஸ் நாட்டிற்கு அரசாங்க பயணமாக சென்றிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று காலை அங்கிருந்து நேரடியாக பெங்களூரு வந்திறங்கினார்.
பெங்களூரு விமான நிலையத்தில் அதிகாரிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர், இந்நிலையில் சாலை வழியாக பெங்களூருவில் உள்ள ISTRACக்கு செல்லும் நரேந்திர மோடி, அதற்கு முன்பாக விமான நிலையத்தில் அவரை காண குழுமியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் சந்தோஷமாக உரையாற்றினார்.
சந்திரயான்-3 பணியில் மூழ்கியதால் சகோதரியின் திருமணத்தைத் தவறவிட்ட இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல்
"ஜெய் விக்யான், ஜெய் அனுசந்தன்.. என்று முழக்கமிட்டு தனது உரையை துவங்கிய மோடி அவர்களைக் கண்டு, அங்கு குழுமியிருந்த மக்களும் மோடியின் ஆதரவாளர்களும் அதே முழக்கங்களை கூறினார். அதன் பிறகு மக்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி அவர்கள் நமது விஞ்ஞானிகள் நம் நாட்டிற்கு மாபெரும் பரிசை அளித்திருக்கிறார்கள் என்றும், பெங்களூருவில் மக்கள் ஆர்ப்பரிக்கும் இதே காட்சிகளை தான் கிரீஸ் நாட்டிலும் கண்டதாக கூறி அவர் பெருமிதம் அடைந்தார்.
என்னால் என்னையே கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை என்றும், முதலில் நான் இந்தியா வந்ததும் பெங்களூருக்கு தான் வர வேண்டும் என்று தான் எண்ணியதாக அவர் கூறினார். முதலில் விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து அவர்கள் முன் தலைவணங்க தான் காத்திருப்பதாக கூறிய அவர், இந்த நிகழ்வில் பெங்களூரு முதல்வரும், கவர்னரும் தன்னுடன் இருப்பார்கள் என்று கூறினார்.
பெங்களூரு மக்கள் காட்டும் இந்த ஆர்வம் தன்னை மேலும் மகிழ்ச்சிபடுத்துகிறது என்றும், விஞ்ஞானிகளை காண தான் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் கூறினார். இந்தியா ஒரு மாபெரும் மையில்கல்லை அடைந்த நேரத்தில் நான் இந்தியாவில் இல்லாத காரணத்தினால், முதலில் இந்தியா வந்ததும் நேராக பெங்களூருக்கு செல்ல வேண்டுமென்று விரும்பியதாக அவர் கூறினார்.
பிரதமரின் வருகையை அறிந்த உள்ளூர் மக்களும் மோடியின் ஆதரவாளர்களும் பெங்களூரு விமான நிலையத்தின் முன் தேசியக்கொடிகளோடு குவிந்துள்ளனர். தற்பொழுது விமான நிலையத்திலிருந்து புறப்பட இருக்கும் பிரதமர் மோடி அவர்கள், நேரடியாக பெங்களூரில் உள்ள ISTRACக்கு சென்று அங்கு விஞ்ஞானிகளை சந்திக்கவுள்ளார்.
சுமார் ஒரு மணி நேரம் அவர் அங்குள்ள விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகளுடன் உரையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த உரையாடல் முடிந்த பிறகு மீண்டும் அவர் பெங்களூரு விமான நிலையத்திற்கு திரும்பி அங்கிருந்து டெல்லி புறப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சந்திரயான் - 3 திட்ட விஞ்ஞானிகளை பாராட்ட பெங்களூரு வந்தடைந்தார் பிரதமர் மோடி