சந்திரயான்-3 பணியில் மூழ்கியதால் சகோதரியின் திருமணத்தைத் தவறவிட்ட இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல்
ஆகஸ்ட் 20ஆம் தேதி உறவினர்கள் அனைவரும் சகோதரியின் திருமணத்திற்காக ஒன்றுகூடியபோது, விஞ்ஞானி வீரமுத்துவேல் இஸ்ரோ கட்டுப்பாட்டை மையத்தில் சந்திரயான்-3 பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதைக் கண்காணிக்கும் பணியில் இருந்த சந்திரயான்-3 திட்ட இயக்குனரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான வீரமுத்துவேல் பணியில் மூழ்கி இருந்ததால் தனது சகோதரியின் திருமணத்தில் கலந்துகொள்வதற்குக்கூட செல்ல முடியவில்லை.
ஆகஸ்ட் 20 அன்று அவரது சகோதரியின் திருமணம் நடந்துள்ளது. ஆனால், சகோதரியின் திருமண வைபவத்தில் கலந்துகொள்வதா அல்லது அடுத்த மூன்று நாட்களில் நிலவில் தரையிறங்க இருக்கும் சந்திரயான்-3 பணிகளைக் கண்காணிப்பதா என்று முடிவு செய்யவேண்டிய நிலையில், பணிதான் முக்கியம் என்று முடிவு எடுத்திருக்கிறார்.
தமிழ்நாட்டின் விழுப்புரத்தைச் சேர்ந்த 46 வயதான இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேலின் குடும்பத்தினர் திருமணத்திற்காக ஒன்றுகூடியபோது, வீரமுத்துவேல் இஸ்ரோவில் பல பணிகளில் மும்மரமாக இருந்தார். புதன்கிழமை, சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியபோது, அவரது குடும்பத்தினர் வீரமுத்துவேலின் அர்ப்பணிப்புக்கு பலன் கிடைத்துவிட்டதாக உற்சாகம் அடைந்தனர்.
வயநாட்டில் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து: 9 தொழிலாளர்கள் பலி; 2 பேர் நிலை கவலைக்கிடம்
சந்திரயான்-3 வெற்றி குறித்து விஞ்ஞானி வீரமுத்துவேல் கூறுகையில், "இது எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம். அனைவரின் கடின உழைப்புக்கும் பலன் கிடைத்திருக்கிறது" என்று தன் பங்களிப்பை அடக்கத்துடன் குறைத்துக் கூறுகிறார். இருந்தாலும், வீரமுத்துவேல் மற்றும் அவரது குழுவினரை அவரது சொந்த ஊரில் உள்ள பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்கின்றனர்.
ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான வீரமுத்துவேலின் தந்தை பழனிவேலு, புதன்கிழமை இஸ்ரோவின் இந்த சாதனையில் தன் மகனின் பங்களிப்பைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் சிந்தினார். விழுப்புரத்தில் வசிக்கும் 70 வயதான தந்தை பழனிவேலு அளித்த அளித்த பேட்டியில், "விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும்தான் என் மகனின் வெற்றியின் ரகசியம். சந்திரயான்-3 திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டதில் இருந்து வீரமுத்துவேல் விழுப்புரம் வரவில்லை; வேலையிலேயே மூழ்கிவிட்டார்" என்று கூறினார்.
தனது மகன் பள்ளி நாட்களில் இருந்தே நன்றாகப் படிக்கும் மாணவன் என்றும், கல்லூரியில் சேர்ந்த பிறகு இன்னும் நன்றாக படிக்க ஆரம்பித்தான் எனவும் அவர் சொல்கிறார்.
இஸ்ரோ விஞ்ஞானி ஆவது தான் லட்சியமா? 10ஆம் வகுப்பில் இருந்தே திட்டமிட்டால் வெற்றி நிச்சயம்!
“அவர் (வீரமுத்துவேல்) விழுப்புரத்தில் உள்ள ரயில்வே பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பில் சேர்ந்தார். சென்னையிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், திருச்சியில் உள்ள பழைய பிராந்திய பொறியியல் கல்லூரியில் (தற்போதைய தேசிய தொழில்நுட்பக் கழகம்) மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முதுநிலை படிப்பை முடித்தார்" என வீரமுத்துவேலின் முன்னேற்றத்தை அவரது தந்தை நினைவுகூர்கிறார்.
"2003 இல் அவருக்கு எச்ஏஎல் (HAL) நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இஸ்ரோவில் பணியாற்ற வேண்டும் என்ற காரணத்திற்காக அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்” எனவும் பழனிவேலு தெரிவித்துள்ளார்.
ஸ்டைலாக சூரியனைத் திரும்பிப் பார்த்த பிரக்யான் ரோவர்! லேண்டரில் இருந்து ஈஸியாக இறங்கியது எப்படி?