ஊழல்வாதிகளில் ஒருவர்கூட தப்பிக்கக் கூடாது: சிபிஐ வைர விழாவில் பிரதமர் மோடி பேச்சு
சிபிஐயின் வைர விழா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ஜனநாயகம் மற்றும் நீதிக்கான மிகப்பெரிய தடையாக ஊழல் இருப்பதாக கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை மத்திய புலனாய்வுப் அமைப்பான சிபிஐயின் வைர விழா கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்தார். அப்போது, நாட்டின் முதன்மை விசாரணை நிறுவனமான சிபிஐ உண்மை மற்றும் நீதிக்கான பிராண்ட் என்று பாராட்டி இருக்கிறார்.
மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ 1963ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிவருகிறது. இந்த அமைப்பின் வைர விழா கொண்டாட்டம் டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர், சிபிஐயின் செயல்பாடுகள் மக்களிடையே ஆழ்ந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக என்று கூறினார்.
"தொழில்முறையிலான திறமையான நிறுவனங்கள் இல்லாமல் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவது சாத்தியமில்லை. எனவே சிபிஐக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. ஜனநாயகம் மற்றும் நீதிக்கான மிகப்பெரிய தடையாக ஊழல் இருக்கிறது. திறமையின் மிகப்பெரிய எதிரி ஊழல். இதுவே சொந்த பந்தமும் குடும்பவாதமும் வளர்வதற்குக் காரணம்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
சின்னப்புள்ளதனமா இருக்கு! ராகுல் காந்தி மேல்முறையீடு குறித்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து
"ஊழலில் இருந்து இந்தியாவை விடுவிப்பதே சிபிஐயின் முக்கியப் பொறுப்பு. ஊழல்வாதிகள் யாரும் தப்பக்கூடாது. இதுவே நாட்டு மக்களின் விருப்பம். பல பரிமாணங்கள் கொண்ட புலனாய்வு அமைப்பாக சிபிஐ உருவாகியுள்ளது. வங்கி மோசடிகள் முதல் வனவிலங்குகள் தொடர்பான குற்றங்கள் வரை சிபிஐயின் விசாரணை வளையும் விரிவடைந்துள்ளது" என்றும் பிரதமர் தெரிவித்தார்.
கறுப்புப் பணம் மற்றும் பினாமி சொத்துகளுக்கு எதிரான நடவடிக்கையை அரசு தொடங்கியுள்ளது என்ற பிரதமர், "நீங்கள் (சிபிஐ) யாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறீர்களோ அவர்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்கள். அவர்கள் பல ஆண்டுகளாக அரசாங்கத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். இன்றும் அவர்கள் சில மாநிலங்களில் ஆட்சியில் உள்ளனர். ஆனால் நீங்கள் உங்கள் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். எந்த ஊழல்வாதியும் தப்பிக்கக்கூடாது" என்றும் சொன்னார்.
இந்த விழாவில், மேகாலயா மாநிலம் ஷில்லாங், மகாராஷ்டிர மாநிலம் புனே மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களில் கட்டப்பட்டிருக்கும் புதிய சிபிஐ அலுவலகங்களையும் பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். சிபிஐ வைரவிழாவை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் தலை, நாணயம் ஆகியவையும் வெளியிடப்பட்டுள்ளன.
சிபிஐயின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கையும் பிரதமர் தொடங்கி வைத்தார். சிறப்பாகப் பணிபுரிந்த சிபிஐ அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவரின் போலீஸ் பதக்கம் வழங்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்டுவரும் விசாரணை அதிகாரிகளுக்கு தங்க பதக்ககளை பிரதமர் மோடி வழங்கினார்.
2 சிறுமிகளுடன் பைக் சாகசம் செய்த மும்பை இளைஞர் கைது