ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக ஐ.சி.சி. மகளிர் உலகக் கோப்பை 2025-ஐ வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, அணி வீராங்கனைகள் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர்.

உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்த ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி வீராங்கனைகள் தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளனர். தகவல்களின்படி, பிரதமர் மோடியைச் சந்திப்பதற்காக நவம்பர் 4 அல்லது 5 ஆம் தேதி டெல்லிக்குச் செல்ல உள்ளனர்.

ஐ.சி.சி. மகளிர் உலகக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி, இந்திய மகளிர் அணி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது.

இந்திய மகளிர் அணியின் முதல் உலகக் கோப்பை

நவம்பர் 2 அன்று டாக்டர் டி.ஒய். பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 298 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 299 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்தது.

இது 50 ஓவர் மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா வெல்லும் முதல் கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி வாழ்த்து

இந்தியா வெற்றி பெற்ற சிறிது நேரத்திலேயே பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துப் பதிவிட்டிருந்தார்.

"ஐ.சி.சி. மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றி பிரமிக்க வைக்கிறது. இறுதிப் போட்டியில் அவர்களின் செயல்பாடு சிறப்பான திறமை மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக இருந்தது. அணி வீராங்கனைகள் போட்டி முழுவதும் ஒற்றுமையாகவும் விடாமுயற்சியுடனும் விளையாடினர். நம் வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, வரும் தலைமுறையினர் விளையாட்டுத் துறையைத் தேர்ந்தெடுக்க ஊக்கமளிக்கும்," என்று பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவுசெய்துள்ளார்.