- Home
- Sports
- Sports Cricket
- இந்திய வீராங்கனைகளுக்கு வைர நகைகள்..! பரிசுகளை அள்ளிக் கொடுக்கும் தொழில் அதிபர்!
இந்திய வீராங்கனைகளுக்கு வைர நகைகள்..! பரிசுகளை அள்ளிக் கொடுக்கும் தொழில் அதிபர்!
50 ஓவர் உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு வைர நகைகள் பரிசளிக்க உள்ளதாக தொழில் அதிபர் கோவிந்த் தோலகியா அறிவித்துள்ளார்.

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி
மகளிர் 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதன் முறையாக கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. உலக அரங்கில் தேசத்தை பெருமைப்படுத்திய நமது வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் என பல்வேறு தலைவர்களும், சினிமா, விளையாட்டு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வீராங்கனைகளுக்கு குவியும் பரிசுகள்
இது மட்டுமின்றி நமது சிங்கப் பெண்களுக்கு பரிசுகளும் குவிந்து வருகின்றன. முதல் உலக்கோப்பையை தட்டித் தூக்கிய இந்திய அணிக்கு 4.48 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.39.55 கோடி) பரிசுத்தொகையை ஐசிசி வழங்கியுள்ளது. மேலும் பிசிசிஐ சார்பில் இந்திய அணிக்கு ரூ.51 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது.
தொழில் அதிபர் சூப்பர் அறிவிப்பு
இந்நிலையில், கோப்பையை கையில் ஏந்திய இந்திய வீராங்கனைகளுக்கு வைர நகைகள் வழங்க உள்ளதாக தொழில் அதிபர் கோவிந்த் தோலகியா அறிவித்துள்ளார். அதாவது சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபரும், ராஜ்யசபா உறுப்பினருமான கோவிந்த் தோலகியா, ஸ்ரீ ராமகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (SRK) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார்.
வைர நகைகள் பரிசு
பளபளப்பான திறமை மற்றும் மீண்டு வரும் மன உறுதியைப் பாராட்டும் விதமாக ஸ்ரீ ராமகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் (SRK) நிறுவனம் சார்பில் இந்திய அணி வீராங்கனைகளுக்கு கையால் வடிவமைக்கப்பட்ட இயற்கை வைர நகைகளை வழங்குவதில் பெருமையடைகிறோம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) கௌரவத் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லாவுக்கு எழுதிய கடிதத்தில் கோவிந்த் தோலகியா தெரிவித்துள்ளார்.
சோலார் மின் கூரைகளும் பரிசு
மேலும் இந்த வைர நகைகளுடன் வீராங்கனைகளின் வீடுகளுக்கு மேற்கூரை சூரிய மின்சக்திப் பலகைகளையும் (Rooftop Solar Panels) பரிசளிக்க விரும்புகிறோம் என்றும் கோவிந்த் தோலகியா கூறியுள்ளார். ''இந்தியாவுக்காக விளையாடும் கிரிக்கெட் வீராங்கனைகள், தங்கள் தைரியம், ஒழுக்கம் மற்றும் உறுதியால் ஒரு பில்லியன் இந்தியர்களின் இதயங்களை ஏற்கெனவே வென்றுவிட்டனர்'' என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.