plastic nation flags banned
குடியரசு தினம் நெருங்கி வரும் நிலையில், பிளாஸ்டிக் மூலம் தேசியக் கொடிகளை யாரும் பயன்படுத்தக் கூடாது, மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுரை கூறி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

நம்பிக்கையின் அடையாளம்
தேசியக் கொடி என்பது, நம்பிக்கை மற்றும் நாட்டு மக்களின் விருப்பங்களை பிரதிபலிப்பதாகும், அதோடு மரியாதைக்கு உரிய விஷயமாகும். முக்கியமான நிகழ்ச்சிகளின் போது, பயன்படுத்தப்படும் தேசியக் கொடி சில நேரங்களில் பிளாஸ்டிக் மற்றும் காகிதத்தால் தயாரிக்கப்படுகிறது.
சூழலுக்கு கேடு
பேப்பர் மூலம் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடி போன்று, சூழலுக்கு கேடுவிளைக்காமல் பிளாஸ்டிக் கொடிகள் இருப்பதில்லை. பூமியில் விழுந்தால் மக்காமல்,நீண்ட காலத்துக்கு மண்ணில் தங்கிவிடும், ஆதலால், பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடியை முறையாக பாதுகாத்து, மரியாதையுடன் வைத்திருப்பது அவசியமாகும்.
விதிகள்
தேசிய விழாக்கள், நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் ஆகியவற்றில் காகிதத்தில் உருவாக்கப்பட்ட தேசியக் கொடிகளையே பயன்படுத்த வேண்டும் எனது இந்திய தேசிய கொடிகள் விதிகள் 2002-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமல்படுத்த வேண்டும்
ஆதலால், பிளாஸ்டிக் மூலம் செய்யப்பட்ட தேசியக் கொடியை யாரும் பயன்படுத்த கூடாது, இது தொடர்பாக மின்னணு, நாளேடுகளில் முறையாக மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் விளம்பரம் செய்ய வேண்டும்.
மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும், அனைத்து அமைச்சக செயலாளர்களும், இந்த உத்தரவை திறன்மிகு வகையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
