ஏடிஎம் மையங்களில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால், அதற்கு சில்லறை கிடைக்காமல் மக்கள் கடும் திண்டாட்டத்தில் உள்ளனர்.

கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் மோடி, 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். கையில் இருப்பு உள்ள பணத்தை, அனைத்து வங்கிகளிலும் செலுத்தி ரூ.4,500 வரை பெற்று கொள்ளலாம் என கூறினார். இதையடுத்து கடந்த ஒரு வாரமாக பொதுமக்கள், வங்கிகளின் வாசலில் பணத்தை மாற்றுவதற்காக காத்துக் கிடக்கின்றனர்.

ஆனால், மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால், வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களின் பணத்தை டெபாசிட் பெறுவதற்ககே, அங்குள்ள ஊழியர்களுக்கு நேரம் சரியாக உள்ளது. வரிசையில் நிற்கும் மக்கள், ஒரு மணி நேரத்துக்கு 5 பேருக்கு மட்டுமே சில்லறை வழங்கப்படுகிறது.

அதே நேரத்தில் ஏடிஎம் மையங்களிலும் பணம் இல்லாமல் போனது. பல ஏடிஎம் மையங்களில் திறந்த ஒரு மணிநேரத்தில் பணம் காலியாகிவிடுகிறது. இதனால், பொதுமக்கள் தெரு தெருவாக அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், நேற்று முதல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, ஐசிஐசிஐ ஆகிய வங்கி ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகள் வினியோகம் செய்யப்பட்டது. இதனால், பொதுமக்கள் செலவுக்கு பணம் கிடைத்தால் போதும் என மகிழ்ச்சியுடன் எடுத்தனர். அந்த மகிழ்ச்சி சில நிமிடத்தில புஸ்வானம் ஆனது.

தற்போது ஏடிஎம் மையத்தில் எடுத்த 2000 ரூபாய் நோட்டுக்கு சில்லறை கேட்டு கடை கடையாய் அலைந்து கொண்டு இருக்கிறார்கள். மக்களின் நிலை இப்படி பரிதாபமாக மாறிவிட்டது.