கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் மோடி, 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். கையில் இருப்பு உள்ள பணத்தை, அனைத்து வங்கிகளிலும் செலுத்தி ரூ.4,500 வரை பெற்று கொள்ளலாம் என கூறினார். இதையடுத்து கடந்த ஒரு வாரமாக பொதுமக்கள், வங்கிகளின் வாசலில் பணத்தை மாற்றுவதற்காக காத்துக் கிடக்கின்றனர்.
பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுதில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை விட, தனியார் வங்கிகளின் செயல்பாடுகள் சூப்பராக உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல மத்திய அரசு அறிவித்தபடி வங்கிகள் நடந்துகொள்வதில்லை என்பதும் மக்களின் மற்றொரு புகாராக உள்ளது.

நேற்று முதல் ஏ.டி.எம். மையங்களில் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் வினியோகம் செய்யப்பட்டன. இது பொதுமக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ.2,000 நோட்டுகள் நிரப்பும் வகையில் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரங்களில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இதற்கான பணிகள் முடிவடைந்த ஏ.டி.எம். இயந்திரங்களில் உடனடியாக ரூ.2,000 நோட்டுகள் நிரப்பப்படுகின்றன.
மேலும், 100 ரூபாய் நோட்டுகளும் நிரப்பப்படுகின்றன. இதனால் பெரும்பாலான பகுதிகளில் உள்ள பிரதான வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரங்கள் செயல்பாட்டுக்கு வரத்தொடங்கியுள்ளன. அந்த ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் எடுப்பதற்காக, பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் கடந்த ஒரு வாரத்தை விட, தற்போது ஏ.டி.எம். சேவை இயல்பு நிலைக்கு வர தொடங்கியுள்ளது.
