நாட்டு மக்கள் அழுது கொண்டிருக்கிறார்கள் பிரதமர்மோடியோ சிரித்துக்கொண்டிருக்கிறார் என்று ராகுல் காந்தி கோபமாக குற்றம்சாட்டியுள்ளார்.
2014 பொதுத் தேர்தலின் போது பிரசாரம் செய்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், மகாத்மாகாந்தியை கொன்றது ஆர்எஸ்எஸ்தான் என்று கூறியிருந்தார். இதற்காக ராகுல் மீது ஆர்எஸ்எஸ் அவதூறு வழக்கு தொடர்ந் திருந்தது.
பிவாண்டி கோர்ட்டில் தொடரப்பட்ட இந்த வழக்கில் ராகுல் இன்று ஆஜரானார். அவருக்கு ஜாமீன் வழங்கிய பின்னர் இந்த வழக்கின் விசாரணை ஜனவரி மாதம் 28ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராகுல் கூறியதாவது: மகாத்மா காந்தியின் கொள்கைக்காக போரிட இந்த நீதிமன்றம் வந்துள்ளேன். நீங்கள் வங்கி வாசலில் கியூவில் நிற்கிறீர்கள். ஆனால் எந்த ஒரு பணக்காரராவது அங்கே நிற்கிறார்களா? ஏழைகளின் பாக்கெட்டுகளில் இருந்து பணத்தை எடுத்து தொழில் அதிபர்களுக்கு தாரை வார்க்கிறார் பிரதமர். அவர்கள் யார் என்பதை நான் சொல்லாவிட்டாலும் உங்களுக்கே தெரியும். அந்த15 பேருக்காகத் தான் அரசாங்கத்தையே மோடி நடத்துகிறார்.
இந்த பணபரிமாற்றமே மிகப்பெரிய மோசடி. மிகப்பெரிய அளவில் மோசடி செய்த விஜய்மல்லையா, லலித் மோடி மீது எல்லாம் கை வைக்காமல் சாதாரண அப்பாவி மக்கள் தலையில் இந்த அரசு கைவைத்துள்ளது.
ரூபாய் நோட்டு பிரச்னையில் நாடே கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறது. பணம் வாங்குவதற்காக கியூவில் நின்ற 20பேர் வரை இறந்துள்ளனர். நாட்டுமக்கள் அழுது கொண்டிருக்கிறார்கள் , ஆனால் நமது பிரதமரோ சிரித்துக் கொண்டே இருக்கிறார். அவர் சிரிக்கிறாரா அல்லதுஅழுகிறாரா என்றே தெரியவில்லை. இது பற்றி அவர் விளக்கம் தரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
