பயணிகள் விமானத்தை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் என்று இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிட்டெட் அமைப்பின் முன்னாள் தலைவர் ஆர்.கே.தியாகி வலியுறுத்தியுள்ளார்.
உலக அளவில் விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் ஏழாவது நாடாக இருக்கும் இந்தியா, வரும் 2020ஆம் ஆண்டில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறும் என்று தியாகி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனால், மற்ற நாடுகளில் இருந்து பயணிகள் விமானத்தை விலைக்கு வாங்குவதை விடுத்து சொந்தமாக உள்நாட்டிலேயே தயாரிக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிட்டெட் அமைப்பு ராணுவ பயன்பாட்டுக்கான விமானங்களை உற்பத்தி செய்து வருகிறது.
இந்த அமைப்பின் முன்னாள் தலைவரான ஆர்.கே.தியாகி, பயணிகள் விமானத்தை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான முன்னேற்பாடுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதற்கான பணிகள் திட்டமிட்டபடி நடந்தால் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் பயணிகள் விமானத்தை உள்நாட்டிலேயே தயாரிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
