குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றும் போது, பாரதிய ஜனதா அரசு கருப்புபணத்தை ஒழிக்க எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பாராட்டிப் பேசினார். குறிப்பாக ‘கரீப் கல்யாண் யோஜனா ’ திட்டத்தை புகழ்ந்தார். இதற்கு ஆளும் பாரதிய ஜனதா கட்சி எம்.பி.கள் மேஜையை தட்டி வரவேற்றனர். ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமைதியாக இருந்தனர்.
பெண்களுக்கு புகழாரம்
பிரணாப் முகர்ஜி தனது உரையில், ரியோ ஒலிம்பிக் போட்டியில் வீராங்கனைகளான சிந்து, சாக்சி மாலிக் ஆகியோர் பதக்கம் வென்றதை பாராட்டினார். இந்திய போர் விமானப்படையில் பெண்கள் சேர்க்கப்பட்டதற்கும் புகழாரம் சூட்டினார்.

நாற்காலி போட இடமில்லை
இதற்கு முன் நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது, மைய அரங்கில் உள்ள பல இருக்கைகள் காலியாக கிடக்கும். ஆனால், இந்த முறை பிராணாப் முகர்ஜி உரையின் போது பெரும்பாலான எம்.பி.கள் வந்து இருந்தனர். திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா எம்.பிகள் மட்டும் பங்கேற்கவில்லை. இதனால், எம்.பி.க்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அமர்வதற்கு நாற்காலி போடக்கூட இடமில்லை. சில எம்.பி.கள் நின்று கொண்டே பேச்சைக் கேட்டனர்.
போட்டோ எடுத்த எம்.பி.கள்
பிரணாப் முகர்ஜியின் உரைய ஏறக்குறைய 2 மணிநேரம் நீடித்தது. இந்த பேச்சின் போது, எம்.பி.க்கள் ஆனந்த் சர்மா(காங்கிரஸ்), ராம் கோபால் யாதவ்(சமாஜ்வாதி), சீதாராம் யெச்சூரி(மார்க்சிஸ்ட்), ஆகியசெல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டும், தீவிர ஆலோசனை நடத்திக்கொண்டும் இருந்தனர்.
எதிர்க்கட்சிதலைவர் அருகே பிரதமர்
மாநிலங்கள் அவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் அருகே நிதிஅமைச்சர் ஜெட்லியும், அவருக்கு அருகே பிரதமர் மோடியும் அமர்ந்து இருந்தனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முதல் வரிசையில் அமர்ந்து இருந்தார். அவருக்கு அருகே முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், அடுத்ததாக எச்.டி. தேவே கவுடா, பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அமர்ந்திருந்தனர்.
தொடக்கத்தையும், முடிவையும் வாசித்தார்
குடியரசுத் தலைவர் உரையின் முதல்பகுதியையும், கடைசிப்பகுதியையும் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி வாசித்தார்.

தேசிய கீதத்தை மதிக்காத தலைவர்
குடியரசுதலைவர் உரை முடிந்தவுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது எழுந்து நிற்காத சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங், தேசிய கீதம் இசைக்கப்பட்டபோதிலும் நடந்து சென்றார்.
திருச்சி சிவாவின் கோஷம்
குடியரசுத் தலைவர் உரை முடிந்தவுடன், அவையில் அமர்ந்திருந்த தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, எழுந்து, தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை குறித்து கோஷமிட்டார்.
