2017ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்ட தொடர் இன்று தொடங்கியது. நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த 2 ஆண்டுகளில், நிதி பற்றாக்குறையால் மோசமான அரசு நிர்வாகத்தில் இருந்து, தற்போது சீரான மற்றும் சரியான நிர்வாகத்துக்கு வந்துள்ளோம்.

கடந்த ஆண்டு விவசாய கடன் ரூ.9 லட்சம் கோடி வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து, 2017 -18 நிதியாண்டில்,ரூ.10 லட்சம் கோடியாகவிவசாய கடன் வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் விவசாய வளர்ச்சி 4.1 சதவீதமாக உயரும்.

கடந்த ஆண்டு பயிர் காப்பீடு திட்டத்துக்கு ரூ.5.500 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போதைய நிதியாண்டில், ரூ.13 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். தேசிய வேளாண் சந்தையின் கீழ் ஒருங்கிணைக்கப்படும் சந்தைகளின் எண்ணிக்கை 559 ஆக உயர்த்தப்படும்.

இதேபோல் விவசாயிகளின் வருமானம், அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போது, பட்ஜெட்டை தயார் செய்த்தன் மூலம் கிராமப்புற பகுதிகளுக்கும், கட்டமைப்பு வசதிகளுக்கும், வறுமை ஒழிப்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

மே 2018க்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி ஏற்படுத்தி தரப்படும். விவசாயிகள் பயிரிடும் விளைபொருட்களுக்கு நல்லவிலை கிடைக்க குளிர்பதன கிடங்குகள் ஏற்படுத்தப்படும். இதனால், விவசாயிகளுக்கு வருவாய் பெருகும்.

விவசாயிகளுக்கு 60 நாள் வட்டி தள்ளுபடி செய்யப்படும். இதன் மூலம் சிறுகுறு விவசாயிகள் தடையின்றி எளிதாக கடன் பெற நடவடிக்கை எடுக்கப்படும். ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் சாதனை அளவாக ரூ.48000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

அதேபோல், அந்நிய நேரடி முதலீடு ரூ.1.7 ஆயிரம் கோடியில் இருந்து, ரூ.1.45ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்படும். கிராமப்புற வளர்ச்சிக்கு தினமும் 133 கி.மீ. சாலை அமைக்கப்படும்.

வறுமை கோட்டூக்கு கீழ் வாழும் ஒரு கோடி குடும்பங்களை சேர்ந்தவர்களை மீட்டு, ஏழ்மையில் இருந்து விடுவிக்க புதிய திட்டம் வகுக்கப்படும். 2019ம் ஆண்டுக்குள் 50,000 கிராம பஞ்சாயத்துகளில் ஏழ்மை முழுதாக நீக்கப்படும் இவ்வாறு அவர் பேசினார்.