நாடாளுமன்றம் 4வது நாளாக ஒத்திவைப்பு; அவைகளை முடக்கிய ராகுல் காந்தி, அதானி விவகாரங்கள்!!
பிரிட்டனில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியிருந்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டு பாஜகவும், பங்குகளின் விலையை அதிகரித்து சந்தையில் அதானி விற்றது தொடர்பாக விசாரணை கோரி எதிர்க்கட்சியினரும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் இன்று நான்காவது நாளாக ஒத்தி வைக்கப்பட்டன.
இன்று காலை மக்களவை துவங்கியவுடன் எதிர்கட்சியினர் அவையின் மத்தியப் பகுதிக்கு சென்று அதானி தனது நிறுவனங்களின் பங்கு விலையை அதிகரித்து சந்தையில் விற்றது எப்படி? இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை நடத்த வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை துவங்கியதில் இருந்து மக்களவை செயல்படவில்லை.
எதிர்கட்சிகளுக்கு சளைக்காமல் ஆளுங்கட்சியினரும் தங்களது இருக்கையில் இருந்தவாறு, பிரிட்டனில் ராகுல் காந்தி பேசி இருந்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கின. அவையை சுமூகமாக நடத்துவதற்கு அனைத்து ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என்று சபாநயாகர் ஓம் பிர்லா கோரிக்கை வைத்தார்.
''நான் தற்போது அவையை எந்த தலையீடும் இல்லாமல் நடத்த விரும்புகிறேன். உங்களுக்கு பேசுவதற்கு போதிய கால அவகாசத்தை நான் வழங்குகிறேன். உங்களது இருக்கைகளுக்கு செல்லுங்கள். நீங்கள் அவையின் மத்தியப் பகுதிக்கு வந்துவிட்டு, வெளியே செல்கிறீர்கள். பின்னர் அவையில் பேசுவதற்கு கால அவகாசம் வழங்கவில்லை என்று கூறுகிறீர்கள். இது சரியில்லை. அவை எந்த இடையூறும் இல்லாமல் நடக்க வேண்டும். நீங்கள் கோஷம் எழுப்புகிறீர்கள். நாடாளுமன்றத்துக்கு என்று கண்ணியம் இருக்கிறது. அதை காப்பாற்ற வேண்டும்'' என்று ஓம் பிர்லா கேட்டுக் கொண்டார்.
ஒரு அரசு வீழ்வதற்கு ஆளுநர் காரணமாக இருக்கலாமா? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி!!
ஆனாலும், எதிர்கட்சியினர் கேட்பதாக இல்லை. இதையடுத்து, மதியம் இரண்டு மணி வரை அவையை சபாநாயகர் ஒத்தி வைத்தார். இதேபோல், மாநிலங்களவையிலும், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கோஷம் எழுப்பி வந்தனர். இதனால், அவை மதியம் இரண்டு மணி வரை ஒத்துவைக்கப்பட்டது.
மாநிலங்களவையின் மத்தியப் பகுதிக்கு சென்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் பேசுவதற்கு தங்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்று கூறி கோஷம் எழுப்பினர். எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் கறுப்பு நிறத்தில் மாஸ்க் அணிந்து வந்து இருந்தனர். தங்களது இருக்கைகளுக்கு சென்று அமருமாறு மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் கேட்டுக் கொண்டார். ஆனால், ''இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது'' என்று பிரிட்டனில் ராகுல் காந்தி கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும் கட்சி எம்பிக்கள் குரல் எழுப்பினர்.
இதையடுத்து, இரண்டு நிமிடங்களில் அவை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த திங்கள் கிழமை அவை துவங்கியதில் இருந்தே சுமூகமாக நடக்கவில்லை. பட்ஜெட் குறித்தும் விவாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி மதுமானக் கொள்ளை ஊழல்: அமலாக்கத்துறைக்கு கடிதம் அனுப்பி விசாரணையைப் புறக்கணித்த கவிதா!