காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, கடந்த 29-ந் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது.
இந்த சம்பவத்தால் இந்தியா - பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்களின் தற்போதைய நிலை என்ன என்பதை பாப்போம்.
கடந்த 16 ஆண்டுகளில் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் தாக்குதலுக்கு உள்ளாகி வருவது பேஹேன்கலார் (Behangalar) என்ற கிராமம். ஜம்முவில் இருந்து தென்மேற்கே சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த கிராமம் உள்ளது.

ஜம்முவின் எல்லையில் இருக்கும் கிராமங்கள் பொதுவாகவே சமவெளியில் தான் உள்ளன, இங்கு விவசாயமும், கால்நடை வளர்ப்பும் முக்கிய தொழிலாக உள்ளன.
பேஹேன்கலார் கிராமத்தில், நாம் பார்த்த காட்சி நம்மை பதற வைக்கிறது. இங்குள்ள வீடுகளின் சுவரில் காணப்படும் ஓட்டைகள் பாகிஸ்தானின் குண்டுகள்,அதன் சுவடுகள் இன்னும் அப்படியே உள்ளன. வெளியே மட்டும் இல்லாமல், கட்டிடத்திற்கு உள்ளேயும் குண்டுகள் ஊடுறுவி சென்றுள்ளன.
இதற்கான இழப்பீடை அரசு இன்னும் வழங்கவில்லை என்கின்றனர் கிராம மக்கள். பேஹேன்கலார் கிராம மக்கள் இன்னும் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர். இப்போதும் கூட இரவில் துப்பாக்கி சப்தம் கேட்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த 15 ஆண்டுகளில் பாகிஸ்தான் ராணுவத்தால் நடத்தப்பட்ட அத்துமீறல்களால் இதுவரை 135-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். எல்லை கிராமங்களில் பாஸ்மதி அரிசி மற்றும் கோதுமை அதிகமாக விளைவிக்கப்படுகின்றன.
ஆனால் பாகிஸ்தான் அத்துமீறலால் விவசாயம் செய்ய முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகளும் பாகிஸ்தானின் குண்டுகளால் பலியாகியுள்ளன. ஆங்காங்கே ராணுவத்தின் பங்கர்கள் என்று சொல்லப்படும் பதுங்குக்குழி இருப்பதால் கிராமத்தின் சூழலே ஏதோ போர்க்களம் போல காட்சியளிக்கிறது, மேலும், சில பங்கர்களுக்குள் ஆயுதங்களும் வைக்கப்படுவதால் மக்களின் பீதி மேலும் அதிகரித்துள்ளது.
