பீகாரில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத அளவில் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 153-ஆக உயர்ந்துள்ளது.

பீகாரில் பெய்துவரும் கன மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 16 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த மாவட்டங்களில் லட்சக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. சாலைகளிலும் மழை வெள்ளம் ஆறாக ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் மழை வெள்ளத்திற்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 153-ஆக உயர்ந்துள்ளது. இம்மாநிலத்தில் ஏறக்குறைய ஒரு கோடி பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர்கள், படகுகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வருகின்றனர்.

வெள்ளத்தில் சிக்கிய 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மீட்புக்குழுவினரால் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பீகாரில் உள்ள அராரியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வெள்ளம் சூழ்ந்ததை அடுத்து அக்கிராம மக்கள் அங்குள்ள பாலத்தின் வழியாக வேறு பகுதிக்கு கடந்துசெல்ல முயன்றனர்.

அப்போது ஒரு தாய் தனது 2 மகள்களுடன் பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்தபோது பாலம் இடிந்து விழுந்தது. இதில் தாயும் அவரது 2 மகள்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.