எதிர்க்கட்சிகள் கூட்டம்: மம்தாவுக்கு சோனியா அழைப்பு; ஆம் ஆத்மி கலந்து கொள்ளுமா?
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது

பாஜக கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சியில் உள்ளது. அதன் தொடர்ச்சியாக, 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் வெற்ற பெற அக்கட்சி முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. வலுவான பாஜகவை எதிர்க்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி, கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 15 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன. மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், சரத் பவார், மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ஒமர் அப்துல்லா, ஹேமந்த் சோரன், மெகபூபா முஃப்தி, உத்தவ் தாக்கரே, லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில், 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்த்து ஒன்றாக போராட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த கூட்டம் இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. பின்னர், அந்த கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, கூட்டத்திற்கான தேதிகளும் அடுத்தடுத்து மாற்றப்பட்டன. இறுதியாக, பெங்களூருவில் காங்கிரஸ் தலைமையில் ஜூலை 17,18 ஆகிய தேதிகளில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஒற்றுமைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஜூலை 17ஆம் தேதி மாலை 6 மணியளவில் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் தொடங்கவுள்ளது. தொடர்ந்து, மறுநாள் 18ஆம் தேதி காலை 11 மணியளவில் மீண்டும் கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான நினைவூட்டல் கடிதங்களும் கட்சிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
பெங்களூரு எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் இந்த முறை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்ளவுள்ளார். அத்துடன், கூடுதலாக சில கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, மதிமுக, விசிக, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு தேச மக்கள் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்), கேரள காங்கிரஸ் (ஜோசப்), மற்றும் கேரள காங்கிரஸ் (மணி) உள்ளிட்ட கட்சிகளுக்கும் காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 24 எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், மதிமுக, கொங்கு தேச மக்கள் கட்சி ஆகிய இரு கட்சிகளும் கடந்த 2014 மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்தவை.
டெல்லியில் அடுத்த சுற்று மழை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
இதனிடையே, பெங்களூரு எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக ராஷ்டிரிய ஜனதாதள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உறுதிபடுத்தியுள்ளார். மேலும், பெங்களூரு கூட்டத்தில் கலந்து கொள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பதாக மம்தா பானர்ஜியும் உறுதிப்படுத்தியுள்ளார். “எதிர்க்கட்சிகள் சந்திப்பு நன்றாக இருந்ததது’ நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்; பாஜகவின் அனைத்து அரசியல் பழிவாங்கல்களுக்கும் எதிராக ஒன்றுபட்டு போராடுவோம்.” என பாட்னா கூட்டத்துக்கு பிறகு மம்தா பானர்ஜி கூறியது நினைவு கூரத்தக்கது.
அதேசமயம் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பெங்களூரு கூட்டத்தில் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. டெல்லி அவசரச் சட்டம் தொடர்பாக, காங்கிரஸுக்கும் ஆம் ஆத்மிக்கும் பல முரண்பாடுகள் இருந்த நிலையில், பாட்னா கூட்டத்திலேயே அவர் கலந்து கொள்ள மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். இருப்பினும், கூட்டத்தின் முடிவில், டெல்லி அவசரச் சட்டத்தை காங்கிரஸ் பகிரங்கமாகக் கண்டிக்காத வரை காங்கிரசை உள்ளடக்கிய கூட்டணியில் தொடர்வது கடினம் என ஆம் ஆத்மி அறிக்கை வெளியிட்டது.
அதன் தொடர்ச்சியாக, ஆம் ஆத்மி - காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே வார்த்தை போர் நிலவி வருகிறது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை குழைக்கும் நடவடிக்கைகளில் அரவிந்த் கெஜ்ரிவால் ஈடுபடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், பாஜகவுக்கு ஆதரவாக கெஜ்ரிவால் செயல்படுவதாகவும் அவர் விமர்சித்திருந்தார்.
டெல்லி அரசு அதிகாரங்களை கட்டுப்படுத்தும் அவசர சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. இந்த சட்டத்தின்படி துணை நிலை ஆளுநருக்கு பரவலான அதிகாரம் இருக்கும். டெல்லியில் அதிகார மையத்தை தங்களது கட்டுக்குள் கொண்டு வரும் வகையிலான இந்த மசோதாவை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கைகொடுக்காத நிலையில், மசோதாவை எதிர்க்குமாறு எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், மசோதா மீதான எதிர்ப்பை காங்கிரஸ் கட்சி இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இருப்பினும், டெல்லி அவசர சட்டத்தின் மீதான வாக்கெடுப்பின்போது, தங்கள் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்க மாட்டார்கள் என காங்கிரஸ் கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், இந்தப் பிரச்சினையில் வாக்களிப்பதில் இருந்து காங்கிரஸின் புறக்கணிப்பு, இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதலை மேலும் அதிகரிக்க பாஜகவுக்கு உதவும் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
சந்திரயான்-3 விண்கலம் எங்கு உள்ளது? விண்ணில் நடந்த அதிசய காட்சிகள் வெளியீடு!
எனவே, பெங்களூருவில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்குமா என்பது இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை. முன்னதாக, காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே, அடுத்த ஒற்றுமைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சிகளின் உயர்மட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான நினைவூட்டல் கடிதங்களை அனுப்பியுள்ள அவர், நடந்து முடிந்த கூட்டத்தின்போது, ஜூலை மாதம் மீண்டும் சந்திக்க எதிர்க்கட்சிகள் சம்மதம் தெரிவித்ததையும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளையும் தாண்டி பிற கட்சிகளுக்கும் புதிதாக அவர் அழைப்பு விடுத்துள்ளார். இருந்தாலும், ஆம் ஆத்மி தரப்பில் இதுவரை கூட்டத்தில் கலந்து கொள்வது உறுதிபடுத்தப்படவில்லை.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், “பெங்களூரு எதிர்க்கட்சிகள் ஒற்றுமை கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி கலந்து கொள்ளும் என நினைக்கிறேன். ஆளுநர்களை கொண்டு குறிப்பாக, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை கொண்டு ஆட்சி நடத்தும் மத்திய அரசின் அணுகுமுறையை தொடர்ந்து நாங்கள் எதிர்த்து வருகிறோம். அந்த வகையில், டெல்லி அதிகாரங்களை கட்டுப்படுத்தும் அவசரச் சட்டத்தை பொறுத்தவரை, எங்களது நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. அதனை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். எங்கள் கட்சிக்கென்று கொள்கை, விதிகள் உள்ளன. அதன்படிதான் நாங்கள் செயல்பட முடியும்.” என தெரிவித்துள்ளார்.
அதேசமயம், எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை சாத்தியமற்றது என மத்திய உள்துறை அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும், எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தை "புகைப்பட அமர்வு" என்றும் அவர் சாடியுள்ளார். பாட்னா கூட்டத்தில் கலந்து கொண்டு புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தவர்கள் ஊழல்வாதிகள் என பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாஜக உயர்மட்ட தலைவர்களின் இத்தகைய விமர்சனங்களின் தொடர்ச்சியாக, மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் பங்கு கணிசமாக இருக்கும் நிலையில், அவரது கட்சி உடைந்துள்ளது. அஜித் பவார், பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து மகாராஷ்டிர முதல்வராகியுள்ளார். இருப்பினும், பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் சரத் பவாருக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிளாவுக்கு பாஜகவினரே காரணம் என எதிர்க்கட்சிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.