டெல்லியில் அடுத்த சுற்று மழை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
டெல்லியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வட மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் 41 ஆண்டுகளில் இல்லாத கனமழை பதிவாகியுள்ளது. கடந்த 8 ஆம் தேதி டெல்லியில் 153 மில்லி மீட்டர் கனமழை பதிவாகியுள்ளது. இதன்மூலம், 41 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் மிக அதிக கனமழை பதிவாகி இருக்கிறது.
கன மழை காரணமாக டெல்லியின் பல்வேறு பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பல பகுதிகளில், முழங்கால் அளவுக்கும் அதிகமாக தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், டெல்லி நகரங்களில் ஆங்காங்கே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும், யமுனை ஆற்றின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. யமுனை ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், டெல்லி நகரே தண்ணீரில் தத்தளிக்கிறது.
பிரான்ஸில் ஒலித்த ‘ஜெய் ஹோ’: ரசித்து கேட்ட பிரதமர் மோடி!
இந்த நிலையில், டெல்லியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையான இன்று நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 25.4 டிகிரி செல்சியஸாக இருக்கிறது. இது பருவத்தின் சராசரியை விட இரண்டு புள்ளிகள் அதிகமாகும் என தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், டெல்லி நகரில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் கணித்துள்ளது.
காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு 13 மி.மீ. என பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் நேற்று பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராஜ்காட்டில் இருந்து நிஜாமுதீன் கேரேஜ்வே வரையிலான ஐபி மேம்பாலம் அருகே சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ரிங் ரோட்டில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் கூறியுள்ளனர். எனவே, சாந்தி வேன், ராஜ்காட், ஜே.எல்.என். மார்க், பி.எஸ்.இசட் மார்க் வழியாக மாற்றுப் பாதையில் பயணிகள் செல்லுமாறு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.