இந்தியாவில் 811 பேருக்கு ஒரு மருத்துவர் மட்டுமே இருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த நிலையைச் சமாளிக்க, மருத்துவக் கல்வி இடங்களை அதிகரிப்பது, சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இந்தியாவில் 811 பேருக்கு ஒரு மருத்துவர் மட்டுமே இருப்பதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா எழுத்து மூலம் சமர்ப்பித்த பதிலில் இந்தத் தகவலை அளித்துள்ளார்.
நாட்டில் 13,88,185 பதிவு செய்யப்பட்ட அலோபதி மருத்துவர்களும், 7,51,768 பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத (AYUSH) மருத்துவர்களும் உள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
"அலோபதி மற்றும் ஆயுஷ் ஆகிய இரு அமைப்புகளிலும் உள்ள பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களில் 80% பேர் பணியில் உள்ளனர் என்று கருதுவதன் அடிப்படையில், நாட்டின் மருத்துவர்-மக்கள் தொகை விகிதம் 1:811 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது," என்று அவர் கூறியுள்ளார்.
மருத்துவக் கல்வி இடங்கள் அதிகரிப்பு
நாட்டில் மருத்துவக் கல்லூரிகள், இளங்கலை (UG) மற்றும் முதுகலை (PG) மருத்துவ இடங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் நட்டா சபைக்குத் தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டு முதல், மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 387-லிருந்து 818 ஆகவும் அதிகரித்துள்ளது. இளங்கலை (UG) இடங்கள் 51,348-லிருந்து 1,28,875 ஆகவும் உயர்ந்துள்ளது. முதுகலை (PG) இடங்கள் 31,185-லிருந்து 82,059 ஆகவும் உயர்ந்துள்ளது.
கிராம சுகாதாரத் திட்டங்கள்
கிராமப்புற மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் மருத்துவர்களின் இருப்பை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.
புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ், 137 புதிய மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
கிராமப்புற மக்களுக்குச் சமமான சுகாதாரச் சேவை கிடைப்பதை உறுதிசெய்ய, எம்பிபிஎஸ் பாடத்திட்டத்தில் குடும்பத் தத்தெடுப்புத் திட்டம் இணைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், மருத்துவக் கல்லூரிகள் கிராமங்களைத் தத்தெடுக்கின்றன. எம்பிபிஎஸ் மாணவர்கள் அந்தக் கிராமங்களில் உள்ள குடும்பங்களைத் தத்தெடுத்து, அரசாங்கச் சுகாதாரத் திட்டங்களின் பலனைப் பெற விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
மருத்துவர்களுக்கு சிறப்புப் படி
மருத்துவக் கல்லூரிகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு முதுகலை மாணவர்கள் மாவட்ட மருத்துவமனைகளில் பணியமர்த்தப்படுகின்றனர். இவை தவிர, கிராமப்புறங்களில் பணிபுரியும் சிறப்பு மருத்துவர்களுக்கு கூடுதல் படிகள் (Hard-area allowance) வழங்கப்படுகிறது என்றும் அமைச்சர் நட்டா குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மருத்துவ ஆணையம் (NMC) வகுத்துள்ள விதிமுறைகள், வெளிநாட்டு மருத்துவர்கள் பயிற்சி, ஆய்வு, தன்னார்வ சேவை போன்ற குறிப்பிட்ட நோக்கங்களுக்காக இந்தியாவில் தற்காலிகமாகப் பணியாற்ற அனுமதிக்கிறது.


