பீகாரில் 'இந்தியா கூட்டணி' ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு அரசு வேலை வழங்கப்படும் என ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்துள்ளார். இந்த சட்டம் 20 மாதங்களுக்குள் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பீகாரில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வரும் நிலையில், எதிர்க்கட்சியான ஆர்.ஜே.டி (RJD) தலைவர் தேஜஸ்வி யாதவ் அதிரடி வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார்.

20 நாளில் சட்டம், 20 மாதத்தில் அமல்:

செய்தியாளர்களைச் சந்தித்த தேஜஸ்வி யாதவ், “பீகாரில் 'இந்தியா கூட்டணி' ஆட்சி அமைத்தால், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், ஒரு சிறப்பு வேலைவாய்ப்புச் சட்டத்தை (Special Employment Law) இயற்றுவோம். புதிய அரசு பதவியேற்ற 20 நாள்களுக்குள் இந்த சட்டம் கொண்டு வரப்படும்.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தேசிய ஜனநாயகக் கூட்டணியால் (NDA) கடந்த 20 ஆண்டுகளாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியவில்லை. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்த 20 நாள்களுக்குள் சட்டத்தைக் கொண்டு வருவோம். மேலும், இந்தச் சட்டம் 20 மாதங்களுக்குள் மாநிலத்தில் முழுமையாகச் செயல்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்," என்று தேஜஸ்வி யாதவ் நம்பிக்கையுடன் கூறினார்.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 2025

பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதலமைச்சராக உள்ள பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது பீகாரில் இரு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டத் தேர்தல் நவம்பர் 6 ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் நவம்பர் 11 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

மொத்தம் 243 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட பீகாரில், தனித்துப் பெரும்பான்மை பெற 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7.42 கோடியாக உள்ளது.