- Home
- Tamil Nadu News
- பாஜகவுக்கு எதிராக எகிறி அடிக்கும் INDI கூட்டணி; தனி விமானத்தில் பீகார் புறப்பட்ட ஸ்டாலின்
பாஜகவுக்கு எதிராக எகிறி அடிக்கும் INDI கூட்டணி; தனி விமானத்தில் பீகார் புறப்பட்ட ஸ்டாலின்
வாக்கு திருட்டுக்கு எதிராக பீகார் மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியுடன் கைகோர்க்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தனி விமானம் மூலம் பீகார் புறப்பட்டார்.

65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
வாக்கு திருட்டு என்ற சம்பவத்தை சுட்டிக்காட்டி நாடு முழுவதும் பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மட்டும் வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பீகாரில் நடைபயணம்
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள எதிர்க்கட்சிகள் இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியதோடு தொடர்ந்து வாக்கு திருட்டு என்ற பெயரில் பொதுமக்களை சந்தித்து தேர்தல் ஆணையம், பாஜக.வின் முறைகேடு தொடர்பாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி தலைமையில் பீகார் மாநிலத்தில் தொடர்ந்து நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தனி விமானத்தில் பீகார் சென்ற முதல்வர்
இந்த நடைபயணத்தில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று பீகாரில் நடைபெறும் நடைபயணத்தில் பங்கேற்கிறார். இதில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் தனி விமானம் மூலம் பீகார் புறப்பட்டார். ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்கும் அவர் தர்பங்கா பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்.
புதிய தலைவலி
வாக்குதிருட்டு விவகாரம் நாடு முழுவதும் பூதாகரமாகியுள்ள நிலையில் இதனை சமாளிப்பது பாஜக.வுக்கு பெரும் தலைவலியாக மாறி உள்ளது. குறிப்பாக பீகார் மாநிலத்தில் ராகுல் காந்தியின் நடைபயணத்திற்கு கொத்து கொத்தாக குவியும் பொதுமக்களின் கூட்டம் பாஜக.வுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் பாஜக சிறப்பு குழுவை அமைத்துள்ளதாகவும், இந்த குழு வாக்கு திருட்டு என்பது பொய் என்ற தொணியில் வீடு வீடாக சென்று விளக்கம் அளிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

