பீகார் தேர்தல் தேதிகள் அறிவிப்பு! 2 கட்ட வாக்குப்பதிவு... நவ. 14 இல் வாக்கு எண்ணிக்கை!
இந்தியத் தேர்தல் ஆணையம் 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முழுமையான அட்டவணையை வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று, நவம்பர் 14 அன்று வாக்குகள் எண்ணப்படும்.

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025
2025 பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான முழுமையான அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
முதற்கட்டத் தேர்தல் (121 தொகுதிகள்):
முதல் கட்டத் தேர்தலுக்கான அறிவிக்கை அக்டோபர் 10, 2025 (வெள்ளிக்கிழமை) அன்று வெளியிடப்படுகிறது.
வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய அக்டோபர் 17 கடைசி நாள் ஆகும். மனுக்கள் அக்டோபர் 18 பரிசீலிக்கப்பட்டு, வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற அக்டோபர் 20 இறுதி நாளாகும்.
இதைத் தொடர்ந்து, முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6, 2025 (வியாழக்கிழமை) அன்று 121 தொகுதிகளில் நடைபெறும்.
இரண்டாம் கட்டத் தேர்தல் (122 தொகுதிகள்):
இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான அறிவிக்கை அக்டோபர் 13, 2025 (திங்கட்கிழமை) அன்று வெளியிடப்படுகிறது. வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய அக்டோபர் 20 கடைசி நாள் ஆகும். மனுக்கள் அக்டோபர் 21 பரிசீலிக்கப்பட்டு, வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற அக்டோபர் 23 இறுதி நாளாகும்.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 11ஆம் தேதி 122 தொகுதிகளில் நடைபெறும்.
வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவு:
இரண்டு கட்டங்களுக்கும் சேர்த்து மொத்தமாக வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அனைத்துத் தேர்தல் நடைமுறைகளும் நவம்பர் 16 க்குள் நிறைவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
🗓️#SCHEDULE for the GENERAL ELECTION TO THE LEGISLATIVE ASSEMBLY OF BIHAR 2025 - Two Phases
Details 👇#Bihar#BiharElections2025pic.twitter.com/ZeTBbpX32O— Election Commission of India (@ECISVEEP) October 6, 2025
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம்
தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கு (Special Intensive Revision - SIR) பிறகு நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். இந்தப் பணியின் மூலம், வாக்காளர் பட்டியலில் இருந்து 68.5 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டும், 21.5 லட்சம் புதிய பெயர்கள் சேர்க்கப்பட்டும், வாக்களர் பட்டியல் திருத்தப்பட்டுள்ளது.
இது குறித்துத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அவர்கள் பேசுகையில், "சிறப்புத் தீவிர திருத்தப் பணியானது, வாக்காளர் பட்டியலைச் சீரமைத்து, தூய்மைப்படுத்தியுள்ளது. வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டபோது, அனைத்து அரசியல் கட்சிகளும் தனிநபர்களும் தங்கள் ஆட்சேபணைகளையும், உரிமை கோரல்களையும் பதிவு செய்ய அழைக்கப்பட்டனர். இறுதி வரைவுப் பட்டியல் செப்டம்பர் 30 அன்று வெளியிடப்பட்டது. பீகார் சட்டமன்றத் தேர்தல் வெளிப்படையான, அமைதியான முறையில் நடத்தப்படும்" என்று உறுதி அளித்தார்.
தொகுதிகள், வாக்காளர்கள்
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான (2025) மொத்த இடங்கள், வாக்காளர் விவரங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் திருத்தப் பணிகள் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தமுள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் முதல் முறையாக ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பொதுப் பார்வையாளர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தேர்தல் தொகுதிகள் விவரம்:
மொத்த இடங்கள்: 243
பட்டியல் சாதிகளுக்கு (SC) ஒதுக்கப்பட்ட இடங்கள்: 38
பழங்குடியினருக்கு (ST) ஒதுக்கப்பட்ட இடங்கள்: 2
வாக்காளர் நிலவரம்:
இத்தேர்தலில் மொத்தம் 7.43 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
மொத்த வாக்காளர்கள்: 7.43 கோடி
ஆண் வாக்காளர்கள்: 3.92 கோடி
பெண் வாக்காளர்கள்: 3.50 கோடி
முதல் முறை வாக்காளர்கள்: 14 லட்சம்