கர்நாடகாவில் மேலும் 23 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அம்மாநிலத்தில் இதுவரை ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் மேலும் 23 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அம்மாநிலத்தில் இதுவரை ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று வெகுவாகக் குறைந்து வந்த நிலையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் என்னும் உருமாறிய கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் தான் முதன் முதலாக ஒமைக்ரான் தொற்று நுழைந்தது. இதுவரை இந்தியாவில் 1,270 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 16,764 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் 450 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. அடுத்தபடியாக டெல்லியில் 320 பேருக்குத் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 23 மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளது. மேலும் மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் தொற்றிலிருந்து குணமடைந்தவர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, டெல்டா வைரஸை போல் ஒமைக்ரான் தொற்றும் பரவும் நிலையை எட்டிவிட்டதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் மக்களுக்கு மேலும் அச்சம் கூடியுள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவில் மேலும் 23 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அம்மாநிலத்தில் இதுவரை ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக ஒமைக்ரான் பாதித்த 23 பேரில் 19 பேர் சர்வதேச பயண தொடர்பு உள்ளவர்கள் என்று கூறப்படுகிறது. ஒமைக்ரான் அச்சுறுத்தி வரும் நிலையில், வரும் நாட்களில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இதன் மூலம், கர்நாடகாவில் மேலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் எனத் தெரிகிறது.
