பழைய 500 ரூபாய்களை பயன்படுத்தி, 11-ந்தேதி முதல், ரெயில், மெட்ரோ ரெயில், அரசு பஸ்களில் டிக்கெட்டுகளைப் பெற முடியாது என மத்திய அரசு நேற்று அதிரடியாக அறிவித்தது.

இதற்கு முன், இம்மாதம் 15-ந்தேதி வரை ரெயில், பஸ்களில் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்திருந்த நிலையில் திடீரென குறைத்துள்ளது.

மத்திய அரசு ரூ.1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என கடந்த மாதம் 8-ந்தேதி அறிவித்தது. அது முதல், வங்கிகளில் மக்கள்தங்களிடம் இருக்கும் பழைய ரூபாய்களை டெபாசிட் செய்தும், மாற்றியும் புதிய ரூபாய்களைப் பெறலாம் என அரசு அறிவித்தது. அதன்பின், பரிமாற்றம் செய்ய கெடுவை நிறுத்தி, டெபாசிட் மட்டுமே வங்கிக்கணக்குகள் செய்யலாம் என அறிவித்தது.

அதிலும், ரூ.1000 நோட்டுகள் மூலம் எந்த சேவையையும் பெற முடியாது என தெரிவித்து, ரூ.500 மூலம் அத்தியாவசிய சேவைகள் உள்ளிட்ட 21 சேவைகளை பெறலாம் என மத்தியஅரசு அறிவித்தது.

இந்நிலையில்,மத்திய, மாநில அரசுகளில் பஸ் டிக்கெட், ரெயில், மெட்ரோ ரெயில் டிக்கெட், ரெயிலில் சாப்பாடு வாங்குவது உள்ளிட்ட சேவைகளுக்கு பழைய 500 நோட்டுகளை வரும் 10-ந்தேதி வரை மட்டுமே பயன்படுத்த முடியும். அதன்பின் பயன்படுத்த முடியாது. அதை வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்து, புதிய ரூபாய்களாகப் பெற முடியும் என அரசு நேற்று அதிரடியாக அறிவித்தது.

பழைய 500 ரூபாய்களைப் பயன்படுத்தி, சிலர் மொத்தமாக டிக்கெட் முன்பதிவு செய்வதும், அதை ரத்துசெய்து பின் நல்ல நோட்டுகளை பெறும் செயல் அதிகரித்து வந்தது. இதையடுத்து இந்த அதிரடி முடிவை அரசு எடுத்துள்ளது.

இதை பெறலாம்…

அதேசமயம், வரும் 15-ந்தேதி வரை அரசு மருத்துவமனைகள், மருந்தகங்கள், நுகர்வோர் கூட்டுறவு விற்பனை நிலையங்கள், அரசு பால் வழங்கும் பூத்கள், பிணம் எரியூட்டும், அடக்கம் செய்யும் இடங்களில் ரூ.500 பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும், சமையஸ் கியாஸ் சிலிண்டருக்கு கட்டணம் செலுத்துவது, தொல்லியல் துறையின் கீழ் உள்ள நினைவிடங்களில் டிக்கெட் பெறுவது, அரசுக்கு கட்டணம், அபராதம் செலுத்துவது, அரசு நிறுவனங்களில் சேவைகள் பெறுவது, அரசுநிறுவனங்களில் விதைகள் பெறுவது, மத்திய,மாநில அரசு பள்ளிகள், கல்லூரிகளில் ரூ.2 ஆயிரம் வரை கட்டணம் செலுத்த, செல்போன்களுக்கு ரூ. 500 வரைரீசார்ஜ் செய்யவும் பயன்படுத்தலாம். இதற்கு வரும் 15-ந்தேதி வரை பழைய 500 ரூபாயை பயன்படுத்த தடையில்லை எனவும் அரசு விளக்கம் அளித்துள்ளது.