ஒடிசா மாநிலத்தில் 16 வயது சிறுமி ஒருவர் மர்ம நபர்களால் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளார். பூரி மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அரசு தரப்பில் சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் 16 வயது சிறுமி ஒருவர் மர்ம நபர்களால் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த சிறுமி, சிகிச்சைக்காக புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பூரி மாவட்டத்தில் உள்ள நிமபாடா தொகுதியில் பாலண்டா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட இடத்தில் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.
காவல்துறை நடவடிக்கை
இந்த சம்பவம் குறித்து பூரி மாவட்ட ஆட்சியர் சஞ்சல் ரானா, ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "ஒரு 16 வயது சிறுமிக்கு தீவைக்கப்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்த தகவல் எங்களுக்கு கிடைத்தது. அவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. நாங்கள் எய்ம்ஸ் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு, அவசர சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
சிகிச்சைக்கான நிதி உதவியை மாவட்ட நிர்வாகம் வழங்கும் என்றும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சஞ்சல் ரானா உறுதி அளித்தார். "காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் இந்த விஷயத்தை மிக தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளன. மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். தேவைப்படும் அனைத்து வகையான நிதி உதவிகளையும் மாவட்ட நிர்வாகமும், அரசும் ஏற்கும். அவர் விரைவில் குணமடைய நாங்கள் பிரார்த்திக்கிறோம். காவல்துறை தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என்று சஞ்சல் ரானா கூறினார்.
ஒடிசா துணை முதல்வரின் வாக்குறுதி
ஒடிசா துணை முதல்வர் பிரபத்தி பரிதா இந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகத் தெரிவித்ததுடன், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
"பலங்கா பகுதியில் சிலர் சாலையில் பெட்ரோல் ஊற்றி பதினைந்து வயது சிறுமிக்கு தீவைத்த செய்தி கேட்டு நான் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். அவர் உடனடியாக புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார், மேலும் அவரது சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மருத்துவ செலவுகளையும் அரசு ஏற்கும். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறை நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
பிஜு ஜனதா தளம் கட்சியினர் போராட்டம்
இதற்கிடையில், பிஜு ஜனதா தளத்தின் (BJD) மகளிர் பிரிவினர், மாநில மகளிர் ஆணையரை நியமிக்கக் கோரி மகளிர் ஆணைய அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிஜு ஜனதா தள தலைவர் இப்சிதா சாஹூ கூறுகையில், "இன்றும் துணை முதல்வர் பிரபத்தி பரிதாவின் தொகுதியில் ஒரு சிறுமிக்கு தீவைக்கப்பட்டுள்ளது. மூன்று பேர் பட்டப்பகலில் அந்தச் சிறுமியின் மீது தீ வைத்துள்ளனர். இன்று ஒடிசாவின் நிலையை கற்பனை செய்து பாருங்கள்... ஒடிசாவில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மகளிர் ஆணையரின் பதவி ஒரு வருடத்திற்கும் மேலாக காலியாக இருப்பதால், இன்று நாங்கள் மகளிர் ஆணைய அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துகிறோம்" என்று தெரிவித்தார்.
