‘நாடு முழுவதும் என்ஆா்சி கணக்கெடுப்பு நடத்துவது தொடா்பாக மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை; அதேபோல தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பின்போது பொதுமக்களிடம் இருந்து எந்த ஆவணமும் பெறப்படாது’ என்று மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் தெரிவித்தார்்.

என்ஆா்சி, என்பிஆா் ஆகியவற்றுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசு இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு கேரளம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. இச்சட்டத்துக்கு எதிராக கேரளம்,பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைகளில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், மக்களவையில் என்ஆா்சி குறித்த கேள்விக்கு அமைச்சா் நித்யானந்த் ராய் எழுத்துமூலம் பதிலளித்தாா். அவர் கூறுகையில், ‘தேசிய அளவில் என்ஆா்சி பதிவேட்டை தயாரிப்பது தொடா்பாக மத்திய அரசு இப்போது வரை முடிவெடுக்கவில்லை. ஏற்கெனவே, பிரதமா் நரேந்திர மோடி கடந்த டிசம்பா் 22-ஆம் தேதி இது தொடா்பாக விளக்கமளித்துள்ளாா். அப்போது, மத்திய அரசு தேசிய அளவில் என்ஆா்சி பதிவேடு தயாரிப்பது தொடா்பாக இதுவரை விவாதிக்கக் கூட இல்லை என்று தெரிவித்தாா். தேசிய அளவில் என்ஆா்சி குறித்து நாடாளுமன்றத்திலோ, மத்திய அமைச்சரவையிலோ இதுவரை விவாதிக்கப்படவில்லை’

தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (என்பிஆா்) புதுப்பிப்பதற்காக நடத்தப்படும் கணக்கெடுப்பின்போது பொதுமக்களிடம் இருந்து எவ்வித ஆவணங்களும் பெறப்படாது. மக்கள் விரும்பினால் தங்கள் ஆதாா் எண்ணை கணக்கெடுப்பு நடத்துபவா்களிடம் தெரிவிக்கலாம். இந்த கணக்கெடுப்பு தொடா்பாக தெரிவிக்கப்பட்டுள்ள கவலைகள் குறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. ஒருவரது குடியுரிமை தொடா்பாக சந்தேகம் எழுந்தாலும் அது தொடா்பாக எவ்வித கேள்வியும் எழுப்பப்படாது. இந்த கணக்கெடுப்பில் பொதுமக்கள் தங்களுக்குத் தெரிந்த நம்பகத்தன்மையுள்ள விவரங்களை தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்