நிர்பயா வழக்கில் குடியரசுத் தலைவர் கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக முகேஷின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கருணை மனுவை நிராகரித்த குடியரசுத் தலைவரின் முடிவும், உள்துறை அமைச்சக ஆவணங்களும் திருப்தியாக இருந்தது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 4 குற்றவாளிகளுக்கும் பிப்ரவரி 1-ம் தேதி தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து குற்றவாளிகள் அனைவருக்கும் வரும் 1-ம் தேதி காலை 6 மணிக்கு தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் திகார் சிறை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.  

இந்நிலையில், தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங் குடியரசுத் தலைவர் கருணை மனு அனுப்பி இருந்தார். ஆனால், அதை பரிசீலனை செய்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் நிராகரித்தார். இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவரின் உத்தரவிற்கு எதிராக முகேஷ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்த வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண் மற்றும் போபண்ணா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அஞ்சனா பிரகாஷ் வாதத்தில், இந்த விவகாரம் அரசியல் காரணங்களுக்காக மிகைப்படுத்தப்படுகிறது. இதில் கருணை மனுவை எந்த அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிராகரித்தார் என்பது புரியவில்லை. மேலும் திகார் சிறையின் உள்ளே முகேஷ் பாலியல் தொடர்பான துன்புறுத்தல்களால் கொடுமைப்படுத்தப்படுகிறார் என வாதிட்டார்.

இதனையடுத்து, மத்திய அரசு வழக்கறிஞர் சொலிசிட்டர் துஷார் மேத்தா வாதிடுகையில் குற்றவாளிகள் செய்த குற்றங்கள் மன்னிக்க முடியாதவை என்றும், அவருக்கு கருணை காட்டக்கூடாது என்றும் தெரிவித்தார். கருணை மனு பரிசீலனைக்காக, வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆகையால், அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறினார். இதனையடுத்து, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை இன்றைக்கு ஒத்திவைத்தனர். 

இந்நிலையில், நிர்பயா வழக்கில் குடியரசுத் தலைவர் கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக முகேஷின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், கருணை மனுவை நிராகரித்த குடியரசுத் தலைவரின் முடிவும், உள்துறை அமைச்சக ஆவணங்களும் திருப்தியாக இருந்தது. சிறையில் துன்புறுத்துவதாக குறை கூறி கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக வழக்கு தொடர முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.