Asianet News TamilAsianet News Tamil

கேரளாவில் நிபா பாதிப்பு எண்ணிக்கை 5ஆக உயர்வு.. தொடர்பு பட்டியலில் 700 பேர், அதிக ஆபத்தில் 77 பேர்..

கேரளாவில் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

Nipah cases rise to 5 in Kerala 700 people in contact list, 77 people in high risk.. Rya
Author
First Published Sep 14, 2023, 7:22 AM IST

கேரளாவில் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. நிபா நோயாளியுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட 24 வயதான சுகாதாரப் பணியாளர் ஒருவருக்கு நிபா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. நிபா வைரஸ் காரணமாக இதுவரை 2 பேர் உயிரிழந்த நிலையில் வைரஸ் பரவுவதைத் தடுக்க மாநில அரசு பல நடிவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் 700 பேர் தொடர்பில் இருந்துள்ளதால் நோயாளிகளின் தொடர்பு பட்டியல் கவலைக்குரியதாக மாறியுள்ளது. இந்த 700 பேரில் 77 பேர் அதிக ஆபத்துள்ள பிரிவில் உள்ளனர் என்று கேரள சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார்.

கேரளாவில் நிபா பரவல்: அரசு வெளியிட்ட சமீபத்திய அறிவிப்புகள் என்னென்ன?

அதிக ஆபத்துள்ள நிபா நோயாளிகள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நிபாவால் உயிரிழந்த இருவரின் வழித்தடங்கள் வெளியிடப்பட்டதால் மக்கள் அந்த வழிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

கோழிக்கோட்டில், திருவிழாக்கள் மற்றும் விழாக்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதைத் தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கோழிக்கோடு மாவட்டத்தின் வடகரா தாலுக்காவில் உள்ள 9 பஞ்சாயத்துகளில் உள்ள 58 வார்டுகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மருந்தகங்கள் மற்றும் சுகாதார நிலையங்களுக்கு கால அவகாசம் வழங்கப்படவில்லை.

கட்டுப்பாட்டு மண்டலங்கள் வழியாக தேசிய நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் பேருந்துகள் அல்லது வாகனங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தக்கூடாது.

 

கேரளாவில் உள்ள நிபா வைரஸ் பங்களாதேஷ் மாறுபாடு.. அதிக ஆபத்தானதா? என்ன சிகிச்சை?

கோழிக்கோட்டில் 9 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க ICMR-ல் இருந்து மோனோக்ளோனல் ஆன்டிபாடியை பயன்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இது நிபாவுக்கு எதிராக செயல்படுகிறது என்பதற்கு மருத்துவ ஆதாரம் இல்லை. ஆனால் தற்போது மட்டுமே கிடைக்கக்கூடிய சிகிச்சை ஆகும். அச்சிறுவன் வென்டிலேட்டர் ஆதரவில் உள்ளார்.

சுமார் 700 பேர் நோயாளிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்றும் அவர்களில் 77 பேர் அதிக ஆபத்தில் உள்ளனர். அவர்கள் அனைவரும் நிலையாக இருப்பதாக அமைச்சர் கூறினார்.

 இந்த முறை கேரளாவில் காணப்படும் நிபா வைரஸ் பங்களாதேஷ் மாறுபாடு ஆகும். இந்த மாறுபாட்டின் தொற்று பரவல் விகிதம் குறைவாக இருந்தாலும் ஆனால் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. இந்த மாறுபாடு மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவுகிறது.

நிபா என்பது விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ் ஆகும், இது பாதிக்கப்பட்ட விலங்குகள் அல்லது அசுத்தமான உணவுகளிலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. பின்னர் அது பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும்.

காய்ச்சல், தலைவலி, இருமல், சுவாசிப்பதில் சிரமம், வாந்தி ஆகிய்வை இதன் அறிகுறிகளாகும். சில நேரங்களில் மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தி மூளை காய்ச்சலை ஏற்படுத்தும். இதன் காரணமாக உயிரிழப்பு ஏற்படலாம்.

மீண்டும் அச்சுறுத்தும் நிபா வைரஸ்.. எப்படி பரவுகிறது? என்னென்ன அறிகுறிகள்? சிகிச்சை என்ன?

 கேரளாவில் நிபா பரவிய நிலையில் அம்மாநில எல்லை கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டம் உஷார் நிலையில் உள்ளது. மாவட்டத்திற்குள் நுழையும் சரக்கு வாகனங்களை சோதனை செய்வதற்காக எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகளைத் திறக்குமாறு காவல்துறைக்கு சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. கேரளாவில் இருந்து மாநிலத்திற்குள் வரும் பழங்களை சோதனை செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போல் தமிழக - கேரள எல்லையோர மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்பு  மற்றும் வாகன சோதனை நடைபெற்று வருகின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios