வருஷா வருஷம் தீபாவளி, ரம்ஜான், கிறுஸ்துமஸ் போல்  மத்திய பட்ஜெட்டும் பட்டாசு கிளப்புவது இந்தியாவில் வாடிக்கை. ஜனவரி இறுதியில், அல்லது பிப்ரவரி துவக்கத்தில் வெளியாகும் பட்ஜெட்டின் மூலம் அடுத்த பதினைந்து நாட்களுக்கு தேசம் முழுக்க அலசல், கருத்துக் கேட்புக் கூத்துக்கள்தான் அல்லோகலப்படும். அந்த வகையில் பா.ஜ.க. தனது ஆட்சியதிகாரத்தை தொடர்ந்து இரண்டாவது  முறையாக தக்க வைத்திருக்கும் நிலையில் வெளிவந்திருக்கும் முதல் பட்ஜெட் இந்த 2020 பட்ஜெட். தேசத்தின் பொருளாதார நிலை மிக மோசமாக இருக்கிறது! என்று சாடப்பட்டு வரும் நிலையில் வெளியாகியிருக்கும் இந்த பட்ஜெட் பற்றி தமிழகத்தின் பிரபல பொருளாதார நிபுணரான நாகப்பன், பிரபல அரசியல் புலனாய்வு வார இதழில் எழுதியிருக்கும் சிறப்புக் கட்டுரையின் ஹைலைட் விஷயங்கள் இதோ....


*    நடுத்தட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தனி நபர் வருமானவரிச் சலுகைகள், பலவிதமான வருமானவரிச் சலுகைகளை உள்ளடக்கிய ஏற்கனவே இருக்கும் நடைமுறைகள் தொடர்கிறது. அதேவேளையில் புதிதாக வரிக் கணக்கிடும் எளிய முறையும் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. 

*    புதிய முறை மூலம் வரி விகிதம் குறைவு. ஆனால் எந்த வரிச் சலுகையும் கிடையாது. இது நல்லதா கெட்டதா? இதனால் யாருக்கு பயன்? என்று கேட்டால்...அது ஆளுக்கு  ஆள் மாறுபடும். ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும். 
*    இளைஞர்கள், அதிக தேவைகள் உள்ளவர்கள், அதிக சம்பாத்தியம் இல்லாவிட்டாலும் சில ஆயிரங்கள் வருமான வரியை மிச்சப்படுத்த லட்சக்கணக்கில் சேமிப்பது எப்படி? என நினைப்பவர்களுக்கான பட்ஜெட் இது. 
*    இந்த பட்ஜெட்டின் மூலம் சேமிக்க வழி உள்ளது மட்டுமில்லாமல், பொருட்களுக்கான தேவை மற்றும் விற்பனை அதிகரிக்கும் வண்ணம் நுகர்வையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. 
*    பொருளாதார தேக்க நிலை மாற உதவலாம். காரணம்  உலக வல்லரசு நாடான அமெரிக்காவின் பொருளாதாரமே மக்களின் நுகர்வு கலாசாரத்தை சார்ந்தே இருக்கிறது என்பதையும் கவனிக்க. 

*    என்.ஆர்.ஐ. எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் யார்? என தீர்மானிக்கும் விதியும் இந்த பட்ஜெட்டில்  மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு குறைந்தபட்சம் 182 நாட்களாவது வெளிநாட்டில் இருப்போர் என்பது அதிகரிக்கப்பட்டு, இனி ஆண்டுக்கு 245 நாட்களாவது இருந்தால்தான் அவர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என கணக்கில் கொள்ளப்படுவர். 
*    ஒட்டுமொத்தத்தில் தனி நபர் வருமான வரி விதிப்பில் இந்த பட்ஜெட் நல்ல பல விஷயங்களைச் செய்திருக்கிறது. 
........என்று சொல்லியிருக்கிறார். 
ஒவ்வொரு தனி நபர் நலன் காக்கப்பட்டாலே ஒட்டுமொத்த இந்தியாவின் நலன் காக்கப்படும். பல சிறு துளிகள் சேர்ந்ததுதானே ஒட்டுமொத்த பெருவெள்ளம்!