நாட்டில் மாநிலங்களுக்‍கு இடையிலான நதிநீர் பிரச்னைகளை கையாள புதிதாக நிரந்தரமான நடுவர் மன்றம் ஒன்றை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாட்டில் பாயும் நீண்ட நதிகளின் தண்ணீரை பகிர்ந்துகொள்வதில் மாநிலங்களுக்‍கு இடையே தொடர்ந்து பிரச்னை நீடித்து வருவதால், அவற்றுக்‍கு விரைந்து தீர்வுகாணும் வகையில் புதிதாக நிரந்தரமான நடுவர் மன்றம் ஒன்றை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய நீர்வளத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

நிரந்தர நடுவர் மன்றம் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், மாநிலங்களுக்‍கு இடையிலான நதிநீர் பிரச்னை சட்டம் 1956-ஐ திருத்தி அமைக்‍கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம், ஒவ்வொரு பிரச்னைக்‍கும் நீதிபதிகள் கொண்ட தனித்தனி அமர்வுகள் ஏற்படுத்தப்படும் என்றும், சுமூக தீர்வு எட்டப்பட்டவுடன் இந்த அமர்வுகள் கலைக்‍கப்பட்டுவிடும் என்றும் புதிய திட்டம் உருவாக்‍கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, நிரந்தர நடுவர் மன்றத்திற்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைவராக இருப்பார் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. நடுவர்மன்றம் தீர்ப்பளித்தவுடன் இறுதித் தீர்ப்பு உடனடியாக மத்திய அரசிதழில் வெளியாகும் வகையில் இந்த திட்டம் உருவாக்‍கப்பட்டுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.