நீட் தேர்வின் புனித தன்மை பாதிக்கப்பட்டுள்ளது: உச்ச நீதிமன்றம்!

நீட் தேர்வின் புனித தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது

NEET UG Row supreme court seeks reply ffrom centre and NTA says sanctity of exam affected smp

இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவு மற்றும் தகுதித் தேர்வான நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு  நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையின்போது, குளறுபடிகளால் நீட் தேர்வின் புனித தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாக தாங்கள் கருதுகிறோம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், மதிப்பெண்களில் முரண்பாடுகள் இருப்பதாகவும், சில மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டி, அந்த தேர்வை ரத்து செய்து புதிய தேர்வை நடத்த வேண்டும் என கோரி தொடரப்பட்ட புதிய மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீட் தேர்வின் புனித தன்மை பாதிக்கபட்டுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளது.

“தேர்வை நடத்துவது அவ்வளவு எளிதல்ல; ஆனால், நீங்கள் அதனை செய்துள்ளீர்கள். அது புனிதமானது. இருப்பினும், நீட் தேர்வில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளால் அதன் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எங்களுக்கு பதில்கள் தேவை.” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், நீட் கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் மறுப்பு தெரிவித்து விட்டனர். இந்த வழக்கு ஜூலை 8 ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் முன்பு தாக்கல் செய்யப்பட்ட மனுவுடன் சேர்த்து இந்த மனு மீதும் விசாரணை நடத்தப்படும் என உத்தரவிட்டுள்ளனர்.

முன்னதாக, நேர இழப்பு என்ற அடிப்படையில் 1536 தேர்வர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி கருணை மதிப்பெண்கள் வழங்குவதற்கான 'நார்மலைசேஷன் ஃபார்முலா'வை தவறாகப் பயன்படுத்தியது சட்டவிரோதமானது தன்னிச்சையானது மற்றும் இந்திய அரசியலமைப்பின் 14 மற்றும் 21 வது பிரிவுகளை மீறும் செயல் எனவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மாதம் ரூ.5000 ஓய்வூதியம்: மத்திய அரசின் சூப்பர் திட்டம் - முழு விவரம்!

அகில இந்திய அளவில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வினை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. அந்த வகையில்,  2024-25 கல்வியாண்டுக்கான இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5ஆம் தேதி நடத்தப்பட்டு ஜூன் 4ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன.

ஆனால், தேர்வு முடிவுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக தேர்வு எழுதிய மாணவர்கள் குற்றம் சாட்டினார். வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், தேர்வு எழுதியவர்களில் 1536 பேருக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டது, இதுவரை இல்லாத அளவுக்கு 67 பேர், 720 என்ற முழு மதிப்பெண்களை பெற்றது, குறிப்பாக ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்கள் 720 / 720 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்திருப்பது என நீட் தேர்வு முடிவுகள் தேசிய அளவில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வில் முறைகேடுகள் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மறு தேர்வு நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios